நிலநடுக்கம் உலுக்கிய மியன்மாரிலும் தாய்லாந்திலும் சிங்கப்பூரின் மூன்று முன்னணி வங்கிகளான யுஓபி, டிபிஎஸ், ஓசிபிசி ஆகியவற்றின் செயல்பாடுகளில் பெரிதும் இடையூறு ஏற்படவில்லை.
கடந்த மார்ச் 28ஆம் தேதி ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் மியன்மாரிலும் தாய்லாந்திலும் 1,700க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துவிட்டனர்; கட்டுமானங்களுக்கும் மிகுந்த சேதம் விளைந்துள்ளது.
இந்நிலையில், தாய்லாந்தில் உள்ள தன் ஊழியர்களில் எவரும் நிலநடுக்கத்தால் காயமடையவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் யுஓபி வங்கியின் பேச்சாளர் தெரிவித்தார்.
“எவரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை. பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு உதவ ஊழியர் உதவித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்,” என்று அவர் கூறினார்.
அத்துடன், யுஓபி பிளாசா பேங்காக்கிலுள்ள தலைமையகம் உட்பட அனைத்து முக்கிய வளாகங்களும் கட்டுமான அடிப்படையில் பாதுகாப்பாக உள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்திலுள்ள யுஓபி கிளைகளில் இரண்டைத் தவிர்த்து மற்ற அனைத்தும் மார்ச் 29ஆம் தேதிமுதல் தங்களது செயல்பாட்டை மீண்டும் தொடங்கிவிட்டன என்றும் அவ்விரு கிளைகளும் கூடுதல் சோதனைகளுக்குப் பிறகு திங்கட்கிழமை (மார்ச் 31) மீண்டும் திறக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.
தாய்லாந்தில் யுஓபி வங்கிக்கு 144 கிளைகள் உள்ளன. அதே நேரத்தில், மியன்மாரில் அது தனது செயல்பாட்டைக் குறைத்துக்கொண்டுள்ளது.
இதனிடையே, “பேங்காக், யங்கூன் கிளைகளில் உள்ள எங்கள் சக ஊழியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பாதுகாப்பாக உள்ளனர். யாரும் காயமடையவில்லை,” என்று ஓசிபிசி குழுமத்தின் பெருநிறுவனப் பாதுகாப்புத் தலைவர் ஃபிரான்சிஸ்கோ செலியா தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“எங்கள் அலுவலகக் கட்டுமானங்கள் பாதுகாப்பாக இருப்பதை அவற்றின் உரிமையாளர்கள் உறுதிசெய்துள்ளனர். எங்கள் சேவைகளில் குறைந்தபட்ச இடையூறே ஏற்பட்டது. அவை வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டன,” என்றும் அவர் கூறினார்.
மியன்மாரிலும் தாய்லாந்திலும் தங்களது செயல்பாடுகளில் நிலநடுக்கம் ஏற்படுத்திய தாக்கம் குறித்து இம்மூன்று வங்கிகள் உள்ளிட்ட பல சிங்கப்பூர் நிறுவனங்களும் பகிர்ந்து வருகின்றன.
இதனிடையே, பேங்காக்கில் உள்ள தன் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை ஃபிரேசர்ஸ் புராப்பர்ட்டி நிறுவனத்தின் பேச்சாளர் பிஸ்னஸ் டைம்ஸ் இதழிடம் உறுதிப்படுத்தினார்.
ஆயினும், நிலநடுக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள மியன்மாரின் மண்டலே நகருக்கு அருகே தான் நிறுவி, இயக்கிவரும் மின்னாலைக்கான மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டது என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30) செம்ப்கார்ப் நிறுவனம் தெரிவித்தது.
மின்பகிர்மானக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே அதற்குக் காரணம் என்ற அந்நிறுவனத்தின் பேச்சாளர், அதைவிடுத்து $403 மில்லியன் மதிப்பிலான அவ்வாலைக்கு வேறு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் சொன்னார்.