சிங்கப்பூர் காவல்துறை, திமோர் லெஸ்டே அதிகாரிகளுடனும் ‘இன்டர்போல்’ எனப்படும் அனைத்துலகக் குற்றவியல் காவல்துறை அமைப்புடனும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், மோசடி செய்யப்பட்ட 40 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் ($53 மில்லியன் வெள்ளி) அதிகமான தொகை மீட்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூர் காவல்துறை ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை இதைத் தெரிவித்தது.
வர்த்தக மின்னஞ்சல் மோசடி தொடர்பில் மீட்கப்பட்ட ஆக அதிகத் தொகை இது என்று அந்த அறிக்கை குறிப்பிட்டது.
ஜூலை 15ஆம் தேதி, விநியோகிப்பாளர் என்ற போர்வையில் மோசடிக்காரர் சிங்கப்பூர் நிறுவனம் ஒன்றிற்கு அனுப்பிய மின்னஞ்சலில் சில பொருள்களுக்கான பணத்தை திமோர் லெஸ்டேயில் உள்ள புதிய வங்கிக் கணக்குக்கு அனுப்பும்படிக் கேட்டிருந்தார்.
விநியோகிப்பாளரின் உண்மையான மின்னஞ்சலில் உள்ள ‘i’ என்ற ஆங்கில எழுத்து ‘I’ என்று மாறியிருப்பதை உணராமல், சிங்கப்பூர் நிறுவன ஊழியர் ஜூலை 19ஆம் தேதி 42.3 மில்லியன் அமெரிக்க டாலரை மோசடிக்காரருக்கு அனுப்பிவிட்டார்.
உண்மையான விநியோகிப்பாளர் பணம் இன்னும் வரவில்லை என்று கூறிய பிறகே மோசடிக்கு ஆட்பட்டது அந்த ஊழியருக்குத் தெரியவந்ததாகக் காவல்துறை கூறியது. இதன் தொடர்பில் ஜூலை 23ஆம் தேதி காவல்துறையிடம் புகாரளிக்கப்பட்டது.
அதன் பிறகு, திமோர் லெஸ்டே அதிகாரிகளுடனும் இன்டர்போல் அமைப்புடனும் இணைந்து பணியாற்றியது சிங்கப்பூர் காவல்துறை.
தொடர்புடைய செய்திகள்
ஜூலை 24ஆம் தேதி சிங்கப்பூர் காவல்துறையின் மோசடித் தடுப்பு நிலையத்திற்கு, திமோர் லெஸ்டே வங்கிக் கணக்கில் இருக்கும் 39 மில்லியன் அமெரிக்க டாலர் தொகை முடக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
ஜூலை 25ஆம் தேதி, சிலரைக் கைது செய்து 2 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை மீட்டதாக திமோர் லெஸ்டே அதிகாரிகள் தெரிவித்தாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது.
திமோர் லெஸ்டேயின் பல்வேறு சட்ட அமலாக்க அமைப்புகளும் புலன் விசாரணை அமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் சந்தேகத்துக்குரிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
திருடப்பட்ட தொகையைப் பாதிக்கப்பட்ட சிங்கப்பூர் நிறுவனத்திற்குத் திருப்பித் தர, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சிங்கப்பூர் காவல்துறை தெரிவித்தது.
உலகளாவிய அச்சுறுத்தலாக விளங்கும் மோசடிகளுக்கு அனைத்துலக அளவிலான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் தேவைப்படுவதாக சிங்கப்பூர் காவல்துறை வர்த்தக விவகாரப் பிரிவின் இயக்குநர் டேவிட் சியூ கூறினார்.
இந்த மோசடிச் சம்பவத்தில் 40 மில்லியன் அமெரிக்க டாலர் மீட்கப்பட்டது அனைத்துலக சட்ட அமலாக்கத் துறையினரின் திறமைக்குச் சான்று என்று கூறிய அவர், இன்டர்போல் அமைப்பும் திமோர் லெஸ்டே அதிகாரிகளும் வழங்கிய வலுவான ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.