புதிய தோற்றத்துடன் வாடிக்கையாளர்களை வரவேற்கும் 7-லெவன் கடைகள்

2 mins read
c2ef82a7-6426-4f31-81f1-371bc045d634
7-லெவன் கடைகளில் வாடிக்கையாளர்களுக்குப் புதிய அனுபவங்களைத் தர விரும்புகிறோம் என்று 7-லெவன் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் அனுஸ்ரீ கோஸ்லா தெரிவித்துள்ளார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரில் உள்ள 7-லெவன் கடைகள் புதிய தோற்றம் பெற்று வருகின்றன.

அந்த வகையில் 7-லெவனின் கேப்பிட்டாஸ்பிரிங் கடை, பிரகாசமான உள்வேலைப்பாடுகளுடன் உணவு சாப்பிடுவதற்கு வசதியான பரந்த மேசைகள் வாடிக்கையாளர்களை வரவேற்கின்றன. தேர்ந்தெடுப்பதற்கு அதிகமான உணவு வகைகளும் உள்ளன. ‘ஸ்மூத்தி’ பழ பானத்தை வாடிக்கையாளர்களே தயாரித்துக் கொள்ள இயந்திரங்களும் வைக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 31ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தியாளர்கள் அங்கு சென்றனர்.

அப்போது அருகில் உள்ள அலுவலகங்களில் வேலை செய்யும் பலர் தங்களுடைய மதிய உணவுக்காக உணவு, ஸ்மூத்தி பானத்தை வாங்குவதற்கு வந்திருந்தனர்.

மத்திய வர்த்தக வட்டாரத்தில் இடம்பெற்றுள்ள கேப்பிட்டாஸ்பிரிங், புதிய வடிவம் கொடுக்கப்பட்டு வரும் 7-லெவன் கடைகளில் ஒன்று.

கடும் போட்டிகளுக்கு இடையே வாடிக்கையாளர்கள் எத்தகைய வசதிகளை எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு கடைகள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

“ஜப்பான், தென்கொரியாவில் உள்ள இதேபோன்ற கடைகளை நினைத்துப் பார்த்தால் உற்சாகமாக இருக்கிறது. புதுப்புது தயாரிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. உணவை மையமாகக் கொண்டு செயல்படுகின்றன. அதே போன்றதொரு அனுபவத்தைத் தர நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்,” என்று 7-லெவன் சிங்கப்பூரின் நிர்வாக இயக்குநர் அனுஸ்ரீ கோஸ்லா தெரிவித்தார்.

சிங்கப்பூரில் உள்ள பேரங்காடிகளிலும் இங்குள்ள வேறு எங்கும் கிடைக்காத சிறந்த உணவு வகைகளும் புதிய உற்சாகமளிக்கும் தயாரிப்புகளும் உள்ள இடமாக இதனை மாற்ற விரும்புகிறோம் என்றும் அவர் கூறினார்.

“கடந்த காலங்களில், மக்கள் அவசரமாகத் தேவைப்படும் பெனடால் வலி மாத்திரைகள், பேட்டரிகளை வாங்க 7-லெவன் கடைகளுக்குச் செல்வார்கள். அதனை மாற்றி புதிய உணவு வகைகளை முயற்சி செய்யவும் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து உணவருந்தும் இடமாகவும் செயல்பட விரும்புகிறோம்,” என்று அனுஸ்ரீ கூறினார்.

புதுப்பிக்கப்பட்ட 7-லெவன் கடைகளில் பான கலவை நிலையமும் அடங்கும். அங்கு வாடிக்கையாளர்கள் ஒரு கப் ஐஸ் வாங்கி தங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப பானங்களைத் தயாரிக்கலாம்.

‘பிளைண்ட் பாக்சஸ்’ எனக் குறிப்பிடப்படும் சேகரிக்கக்கூடிய தயாரிப்புகளும் விற்கப்படுகின்றன. வாடிக்கையாளர்கள் பெட்டியைத் திறந்து பார்க்கும் வரை உள்ளே இருக்கும் பொருள் பற்றி தெரியாது.

சிங்கப்பூரில் உள்ள ஏறக்குறைய நூறு 7-லெவன் கடைகளை 2026ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்