வரும் செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து மின்சிகரெட் தொடர்பான குற்றங்களைச் செய்து பிடிபடும் மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாக்கப்படவுள்ளன.
கடந்த 2022-2024 காலகட்டத்தில் ஆண்டுதோறும் சராசரியாக 3,100 மாணவர்கள் மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காகப் பிடிபட்டனர்.
அவர்கள் தொடக்கப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மற்றும் மில்லெனியா கல்வி நிலையங்களைச் சேர்ந்தவர்கள்.
இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கு அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டதே காரணம் என்று கல்வி அமைச்சின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
இந்த மூவாண்டுக் காலகட்டத்தில் ஆண்டுதோறும் தொழில்நுட்பக் கல்விக் கழகம், ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகள், ஆறு தன்னாட்சிப் பல்கலைக்கழகங்கள் ஆகிய உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 800 மாணவர்கள் மின்சிகரெட் தொடர்பான குற்றங்களுக்காகப் பிடிபட்டனர்.
கடந்த 2020ஆம் ஆண்டிற்குமுன் பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் மின்சிகரெட் தொடர்பில் ஆண்டுதோறும் 50க்கும் குறைவான சம்பவங்களே பதிவாகின.
இந்நிலையில், மின்சிகரெட்டிற்கு எதிராகத் தேசிய அளவில் வலுப்படுத்தப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கான தண்டனைகளும் கடுமையாகின்றன.
“பள்ளிகள் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கும். குற்றமிழைத்த மாணவரின் நடத்தைத் தரத்தில் மாற்றம் செய்யப்படும். கற்பித்தல், மறுவாழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்,” என்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தடுப்புக்காவலில் வைப்பது முதல் உபகாரச் சம்பளங்களை மீட்டுக்கொள்வது வரையிலான நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும்.
இடைநீக்கம், தடுப்புக்காவல், பிரம்படி உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளைப் பள்ளிகள் மேற்கொள்ளும். மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடும் மாணவர்கள் கடுமையான தண்டனையை எதிர்கொள்வர்.
உயர்கல்வி நிலைய மாணவர்கள் அபராதத்தையும் சீர்திருத்த உத்தரவு ஆணையையும் எதிர்நோக்கலாம். அத்துடன், தலைமைத்துவ வாய்ப்புகள், மாணவர் பரிமாற்றத்தின் மூலம் வெளிநாட்டிற்கான கல்விப் பயணம், உபகாரச் சம்பளம் போன்ற சலுகைகளும் மீட்டுக்கொள்ளப்படலாம்.
விடுதிகளில் இருப்போர் மின்சிகரெட் புழங்கிய குற்றம் உறுதிப்படுத்தப்பட்டால் விடுதிகளிலிருந்து வெளியேற்றப்படுவர். மீண்டும் குற்றம்புரிவோரும் மின்சிகரெட் கடத்துவோரும் இடைநீக்கம் அல்லது நிரந்தர நீக்கத்தை எதிர்நோக்கலாம்.
பள்ளிகளில் விழிப்புணர்வுக் கல்வி, மாணவர்களின் பெற்றோரைச் சென்றடைதல், அமலாக்கத்தை வலுப்படுத்துதல் போன்ற வழிகளில் மின்சிகரெட்டிற்கு எதிரான தேசிய முயற்சிகளுக்குக் கல்வி அமைச்சு கைகொடுக்கும் என்று அமைச்சர் லீ கூறியிருக்கிறார்.
பள்ளிகளிலும் உயர்கல்வி நிலையங்களிலும் பொருத்தமான, உரிய நேரத்தில் அமலாக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஏதுவாக குறிப்பிட்ட ஊழியர்களுக்குப் பயிற்சியளிப்பது தொடர்பில் சுகாதார அறிவியல் ஆணையத்துடன் அமைச்சு இணைந்து பணியாற்றி வருகிறது.

