பேங்காக்: சிங்கப்பூரில் பாலியல் சேவையில் ஈடுபடுவதற்காகத் தாய்லாந்துப் பெண்களை ஆள்சேர்க்கும் இணையக் குற்ற கும்பலுடன் தொடர்பில் இருந்ததாகச் சந்தேகத்தின்பேரில் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் 46, 42 வயதுடைய இரு சிங்கப்பூர் ஆடவரும், 37, 33 வயதுடைய இரு தாய்லாந்துப் பெண்களும், 35 வயதுடைய ஒரு தாய்லாந்து ஆடவரும் அடங்குவர்.
நீதிமன்றப் பிடியாணைமூலம் சந்தேகப் பேர்வழிகள் அடையாளம் காணப்பட்டனர்.
ராயோங், பிட்சானுலோக் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் அவர்கள் பிடிபட்டனர். தாய்லாந்தின் மத்திய புலனாய்வுப் பிரிவு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
சிங்கப்பூர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குற்றப் பிரிவு அளித்த தகவல்களின் அடிப்படையில் அந்த விசாரணையை தாய்லாந்து மேற்கொண்டது.
பாலியல் வருமானத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் வங்கிப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்த அதிகாரிகள், 350,000 பாட்டுக்கும் (S$13,000) அதிக மதிப்புள்ள பொருள்களைப் பறிமுதல் செய்தனர்.
அவற்றில் 15 கைப்பேசிகள், மூன்று கணினிகள், மடிக்கணினிகள், 16 வங்கிக் கணக்குப் புத்தகங்கள், 10 ஏடிஎம் அட்டைகள், 100,000 பாட் ரொக்கம், நகைகள் ஆகியவை அடங்கும்.
பெண்களை ஆள்சேர்த்தது, பாலியல் சேவையை ஒருங்கிணைத்து ஊக்குவித்தது, நிதிப் பரிவர்த்தனைகள், நாடுகடந்த சட்டவிரோத அமைப்பில் பங்கேற்றது ஆகிய குற்றச்சாட்டுகள் கைது செய்யப்பட்டவர்கள்மீது சுமத்தப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் பாலியல் சேவைகளுக்காகப் பெண்களை ஆள்சேர்த்து வருவதாக ‘எல்’ என அடையாளம் காணப்பட்ட 46 வயது சிங்கப்பூரர் முதற்கட்ட விசாரணையில் ஒப்புக்கொண்டார்.
42 வயதான ‘ஏ’ என்ற மற்றொரு சிங்கப்பூரர் தனது கூட்டாளி என்றும், வாடிக்கையாளர்களைத் தொடர்புகொள்ள டெலிகிராம், லைன், வாட்ஸ்அப் ஆகிய செயலிகளைப் பயன்படுத்தியதாகவும் அவர் விரிவாக விவரித்தார்.
