இல்லப் பணிப்பெண் ஒருவரை அவருடைய புதிய முதலாளி வீட்டிற்கு அழைத்துச் சென்ற வேலைவாய்ப்பு முகவர் ஒருவர், அடுக்குமாடி கார் நிறுத்தத்தில் வைத்து அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.
கடந்த 2022 ஜனவரி 24ஆம் தேதி அக்குற்றத்தைப் புரிந்ததை ஒத்துக்கொண்ட அந்த 37 வயது ஆடவர்க்கு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) 12 ஆண்டுச் சிறையும் 12 பிரம்படிகளும் தண்டனையாக விதிக்கப்பட்டன.
அதே பணிப்பெண்ணையும் 2021 செப்டம்பரில் இன்னொரு பணிப்பெண்ணையும் மானபங்கம் செய்த குற்றச்சாட்டுகளும் தண்டனை விதிக்கப்படுமுன் கவனத்தில் கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்களின் அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த மலேசிய ஆடவரைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
வன்கொடுமைக் குற்றமிழைத்தபோது அந்த ஆடவர் ஒரு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் மூத்த விற்பனை ஆலோசகராகப் பணிபுரிந்துவந்தார்.
பாதிக்கப்பட்ட பெண், 2022 ஜனவரி 12ஆம் தேதி முதன்முறையாகச் சிங்கப்பூருக்கு வந்தார். அந்த இந்தோனீசியப் பெண்ணுக்கு அப்போது 24 வயது. அவர் ஜனவரி 21ஆம் தேதி அந்த ஆடவரிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார்.
ஜனவரி 24ஆம் தேதி தமது முதலாளி வீட்டிற்குக் கிளம்புமுன் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அலுவலகத்திற்குச் சென்றார் அப்பெண்.
அவரை அழைத்துச் செல்ல பிற்பகல் 2.30 மணிக்கு ஒரு தனியார் வாடகைக் காரை அமர்த்திய அந்த ஆடவர், ஆனால் தவறான முகவரியைப் பதிவிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
காருக்காகக் காத்திருந்தபோது, இறந்துவிட்ட கணவர் குறித்து அவர் அப்பெண்ணிடம் விசாரித்தார். அப்போது, தன் காதலியாக இருக்க முடியுமா என்று அப்பெண்ணிடம் அவர் கேட்டதாகவும் அதற்கு அப்பெண் மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
பின்னர் அங்கு வந்த வாடகை கார், அவர்களை ஏற்றிச் சென்று ஓரிடத்தில் இறக்கிவிட்டது.
அப்போதுதான் தவறான முகவரிக்கு வந்துவிட்டதை அந்த ஆடவர் உணர்ந்தார். அவர்கள் செல்ல வேண்டியது தரைவீட்டிற்கு. ஆனால், சென்றடைந்ததோ வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேட்டைக்கு.
பின்னர் முதலாளியின் மனைவியிடம் முகவரியை அந்த ஆடவர் உறுதிப்படுத்திக்கொண்டார். அப்போது, தன் மனைவி மலேசியாவில் இருக்கிறார் என்றும் கொவிட்-19 கட்டுப்பாடுகளால் அவரை நீண்டகாலமாகப் பார்க்க முடியவில்லை என்றும் அப்பணிப்பெண்ணிடம் அந்த ஆடவர் கூறினார்.
பின்னர் அருகிலுள்ள புளோக்கின் உயர்தளத்திற்கு அப்பெண்ணை அழைத்துச் சென்ற அந்த ஆடவர், மின்தூக்கியைவிட்டு இறங்கியதும் அவரைக் கட்டியணைத்தார்.
அதன்பின் பிற்பகல் 3.50 மணியளவில் அருகிலுள்ள அடுக்குமாடி கார் நிறுத்தத்திற்கு அழைத்துச் சென்று, அப்பெண்ணை அந்த ஆடவர் சீரழித்ததாகக் கூறப்படுகிறது.
மாலையில் முதலாளி வீட்டிற்குச் சென்றதும் தனக்கு நேர்ந்ததைச் சொல்லி அந்தப் பணிப்பெண் அழுதார். அதனைத் தொடர்ந்து, மறுநாள் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட, அதற்கு மறுநாள் அந்த ஆடவர் கைதுசெய்யப்பட்டார்.