சீன நிறுவனங்களை ஈர்க்க முற்படும் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை

2 mins read
28cf0401-1c1e-42b4-9a4b-5d4e8de6ab0c
சீனாவுக்கான மூலதனச் சந்தைப் பிரிவுத் தலைவர் சியா சாய்ஹான்.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில், அடுத்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் பிரபலச் சீன நிறுவனங்களின் பெயர்களை முதலீட்டாளர்கள் பார்க்கமுடியும்.

எஸ்ஜிஎக்ஸ் எனப்படும் சிங்கப்பூர்ப் பங்குச்சந்தை, சீன நிறுவனங்களை இங்கு ஈர்க்க முனைவதே அதற்குக் காரணம்.

அண்மையில் சீனா, சிங்கப்பூர் இருதரப்புகளின் கட்டுப்பாட்டு அமைப்புகளும் அதற்கு ஒப்புதல் தந்துள்ளன. அத்துடன் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தைக்கு அரசாங்கம் புதிய மானியங்களை இவ்வாண்டு வழங்கியது. சிங்கப்பூர் நாணய ஆணையம் $5 பில்லியன் மதிப்புள்ள பங்குச் சந்தை வளர்ச்சித் திட்டத்தைத் தொடங்கியது.

இந்நிலையில்தான் எஸ்ஜிஎக்ஸ், ஏற்கெனவே சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களை இங்கு ஈர்க்க முற்படுகிறது. நவீன உற்பத்தி, மின்னிலக்க உள்கட்டமைப்பு, பயனீட்டாளர் தொழில்நுட்பம், சுகாதாரப் பராமரிப்பு, நீடித்து நிலைத்திருக்கும் எரிசக்தி முதலிய துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களைக் குறிவைத்துள்ளது எஸ்ஜிஎக்ஸ்.

இம்முறை அது, வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் ஆற்றல்பெற்ற நிறுவனங்களில் கவனம் செலுத்துகிறது.

புகழ்பெற்ற நிறுவனங்களை இங்கு ஈர்த்து, அவற்றை முதன்முறையாகப் பங்குச் சந்தையில் இடம்பெறவைப்பதே முதற்கட்ட நடவடிக்கை என்று எஸ்ஜிஎக்ஸ் குழுமம் தெரிவித்தது. இந்த வட்டாரத்தில் வளர்ச்சி காணும் நோக்கத்துடன் சிங்கப்பூருக்குத் தலைமையகத்தை மாற்றிய நிறுவனங்களுக்கு முதலில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அது கூறியது.

எஸ்ஜிஎக்ஸ் நிலையத்தில் இம்மாதம் (டிசம்பர் 2025) 17ஆம் தேதி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திடம் சீனாவுக்கான மூலதனச் சந்தைப் பிரிவுத் தலைவர் சியா சாய்ஹான் அந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

சீனாவில் நிறுவனங்கள் நிதி திரட்டும் போக்கு மெதுவடைந்துள்ளது. அதனைக் கருத்தில்கொண்டு, ஏற்கெனவே சீனப் பங்குச் சந்தையில் உள்ள நிறுவனங்களைச் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையிலும் இடம்பெறச்செய்ய முயல்வது எஸ்ஜிஎக்ஸ் மேற்கொள்ளவிருக்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கை.

அவ்வாறு செய்வது இங்குள்ள முதலீட்டாளர்களிடையே அந்நிறுவனங்களின் மதிப்பை உயர்த்த உதவும் என்றார் திருவாட்டி சியா. தென்கிழக்காசியாவில் கிளை பரப்பவும் நிறுவனங்களுக்கு அது கைகொடுக்கும் என்று அவர் சொன்னார். அமெரிக்க, ஐரோப்பிய, வட்டார முதலீட்டாளர்களை அந்நிறுவனங்கள் அணுகவும் வாய்ப்புகள் கிடைக்கும்.

ஈராயிரமாம் ஆண்டுகளில் சீனப் பங்குச் சந்தையில் இடம்பெற்றிருந்த பல நிறுவனங்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கின. மோசடி, கணக்கியல் முறைகேடுகள், கடன் பிரச்சினைகள் முதலியவை அவற்றுள் அடங்கும். அதன் பின்னர், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்திற்குத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டது. அவை பங்குச் சந்தையிலிருந்தும் நீக்கப்பட்டன.

“சில நிறுவனங்கள் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் இறங்கின. அவை சந்தைக்குத் தவறான தகவல்களை அனுப்பின. அதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்தனர். மீண்டும் அவ்வாறு நடக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம்,” என்றார் திருவாட்டி சியா.

குறிப்புச் சொற்கள்