இந்தோனீசியாவில் புகைமூட்டத்துக்குக் காரணமான காட்டுத்தீச் சம்பவங்கள் பொறுப்பற்ற வர்த்தக நடைமுறைகளால் ஏற்படுகின்றன. சிங்கப்பூர் தனக்குள்ள அதிகாரம் அனைத்தையும் பயன்படுத்தி அத்தகையோரைப் பொறுப்பேற்க வைக்கும் என்று மூத்த அமைச்சர் கா. சண்முகம் புதன்கிழமை (அக்டோபர் 28) தெரிவித்துள்ளார்.
காட்டுத்தீச் சம்பவங்களுடன் தொடர்பிருப்பதாக விசாரிக்கப்படும் 10 நிறுவனங்களின் மூத்த தலைவர்களிடம் திரு சண்முகம் பேசினார்.
நிறுவனத்தின் செயல்பாடுகளும் விநியோகத் தொடர்களும் புகைமூட்டத்திற்குப் பங்களிக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் பொறுப்பு அந்தத் தலைவர்களுக்கும் இருப்பதை அவர் குறிப்பிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய திரு சண்முகம், சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் சிங்கப்பூரையும் அதைச் சுற்றியுள்ள வட்டாரங்களையும் பாதிக்காத வகையில் அவற்றின் செயல்பாடுகளை வைத்திருக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியதாகச் சொன்னார்.
“நேரடியாகவோ வர்த்தக உறவுகள், விநியோகத் தொடர்கள் மூலமாகவோ குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஈடுபாடு குறித்த சந்தேகம் இருக்கும்போது ஆதாரங்களைத் தீர ஆராய்வோம்,” என்று உள்நாட்டு நெருக்கடிநிலை குறித்த அமைச்சர்நிலைக் குழுவின் தலைவருமான திரு சண்முகம் கூறினார்.
சிங்கப்பூரைப் பாதிக்கும் விவகாரங்களை அரசாங்கம் கையாளவேண்டும் என்று வர்த்தகத் தலைவர்களிடம் விளக்கிய திரு சண்முகம், காற்றின் தரம் அக்டோபர் மாதத்தில் எந்த அளவு மோசமடைந்தது என்பதைச் சுட்டினார்.
காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு ஒருசில நாள்களில் 200க்கும் அதிகமாகப் பதிவானது.
அதன் காரணமாக, பிள்ளைகள், மூத்தோர், நாள்பட்ட இதய, நுரையீரல் பிரச்சினை உள்ளோர் போன்றோரின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் திரு சண்முகம் கூறினார்.
அரசாங்கத்தின் இத்தகைய முயற்சிகள் பலியாடுகளைத் தேடிப் பழிசுமத்துவதற்கு அல்ல என்று விவரித்த திரு சண்முகம், சிங்கப்பூருக்கும் சிங்கப்பூரர்களுக்கும் புகைமூட்டம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் அரசாங்கம் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் வலியுறுத்தினார்.
கூட்டம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, “கூட்டம் அதிக நேரம் நடைபெறவில்லை. அரசாங்கம் அதன் எதிர்பார்ப்புகளை முன்வைத்தது. நிறுவனங்கள் ஒத்துழைக்கச் சம்மதித்தன,” என்றார் அவர்.
மூத்த வழக்கறிஞர் தவீந்தர் சிங்கும் கூட்டத்தில் பங்கேற்றார். திரு தவீந்தரின் சட்ட நிறுவனம் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்குவதுடன் எல்லை தாண்டிய பிரச்சினையைக் கையாள நியமிக்கப்படும் வல்லுநர் குழுவை மேற்பார்வையிடும்.
