கட்டுமானத் துறையில் வெளிநாட்டு ஊழியரைப் பணியமர்த்தும் காலம் குறைப்பு

2027 முதல் நான்கு மாதங்களிலிருந்து ஒரு மாதமாகக் குறையும்: அமைச்சர் சீ ஹொங் டாட்

கட்டுமானத் துறையில் வெளிநாட்டு ஊழியரைப் பணியமர்த்தும் காலம் குறைப்பு

3 mins read
35d392b2-08f5-4435-963c-55104c7d6b00
தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், கரையோரப் பூந்தோட்டங்கள் பகுதியில் ‘பில்டுஎஸ்ஜி லீட்’ மாநாட்டை வியாழக்கிழமை (ஏப்ரல் 30) தொடங்கிவைத்துப் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கட்டுமானத் துறையில் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியமர்த்துவதற்கான செயல்முறைக் காலம் 2027 முதல் நான்கு மாதங்களிலிருந்து ஒரு மாதமாகக் குறையும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் அறிவித்துள்ளார்.

கட்டுமானத்துறையில் உற்பத்தித் திறனைப் பெருக்க, பணியமர்த்தல் காலம் குறைப்பு, புதிய தொழில்நுட்பம், இருவழி கருத்துப் பரிமாற்ற முறை ஆகிய புதிய நடைமுறைகள் இடம்பெறுவதாக ‘பில்டுஎஸ்ஜி லீட்’ (BuildSG LEAD) மாநாட்டை வியாழக்கிழமை (ஏப்ரல் 30) தொடங்கிவைத்துப் பேசிய அமைச்சர் கூறினார்.

புதிய நடைமுறைப்படி, 2027 ஜனவரி முதல் சீனா, தாய்லாந்து நாடுகளைச் சேர்ந்த ஊழியர்கள் சிங்கப்பூர் வருவதற்கு முன்பே தகுதித் தேர்வை எழுத வேண்டியதில்லை. சிங்கப்பூர் வந்த பிறகு அவர்களது தொழில்முறை அறிவும் செயல்முறைத் திறனும் சோதிக்கப்படும்.

இந்த வசதி 2028 ஜனவரி முதல் இந்தியா, இலங்கை, பங்ளாதேஷ்,மியன்மார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தோர்க்கும் விரிவுபடுத்தப்படும்.

ஊழியர்கள் வேலை அனுமதி பெற்று ஆறு மாதங்களுக்குள் சான்றிதழ் பெற வேண்டும். தவறினால், நிறுவனங்களுக்கு அதிகத் தீர்வை விதிக்கப்படும்; ஓராண்டுக்குப் பிறகு அவர்களது வேலை அனுமதியும் புதுப்பிக்கப்படாது.

“வரவிருக்கும் ஆண்டுகளில் கட்டுமானத் தேவை அதிகமாக இருக்கும். எனவே, தகுதியுள்ள புதிய ஊழியர்களின் வருகையை எளிதாக்கவும் விரைவுபடுத்தவும் வழிகளைக் கண்டறிவது மிகவும் அவசியம்,” என்றார் திரு சீ.

கடந்த 2025 டிசம்பர் மாதம் வரையிலான புள்ளிவிவரங்களின்படி, கட்டுமானத்துறை, கடல்துறை, செய்முறை தொழில்துறை ஆகியவற்றில் 482,600 வேலை அனுமதி அட்டை (வொர்க் பர்மிட்) ஊழியர்கள் பணிபுரிவதாக அவர் கூறினார்.

கட்டுமானத் துறையின் உற்பத்தித்திறனை மேம்படுத்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்ட பணிக்குழுவின் தொடக்க நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். திரு சீ தலைமையில் இயங்கும் இக்குழுவில் அரசு அமைப்புகள், மேம்பாட்டாளர்கள், ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள், கல்வியாளர்கள் எனப் பலதுறைப் பேராளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

கட்டுமானத்தில் புதிய தொழில்நுட்பம்

கட்டுமானத்துறையில் உற்பத்தித் திறனைப் பெருக்க ‘கிட்-ஆஃப்-பார்ட்ஸ்’ (Kit-of-Parts) எனும் தரப்படுத்தப்பட்ட கட்டுமான பாகங்களைப் பயன்படுத்தும் முறை ஊக்குவிக்கப்படும். ‘லெகோ’ கட்டை அடுக்குவது போன்ற இந்த அணுகுமுறை கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்தும். இந்த முறையில், உற்பத்திச் செலவை 10 விழுக்காடு வரையும் மனிதவளத் தேவையை 20 விழுக்காடு வரையும் குறைக்கலாம். வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் (வீவக) தனது திட்டங்களில் இத்தகைய தரப்படுத்தப்பட்ட பாகங்களைப் பயன்படுத்தும் என்றார் அமைச்சர்.

இருவழிக் கருத்துப் பரிமாற்ற வசதி

ஆலோசனை நிறுவனங்களுக்கும் அரசாங்க அமைப்புகளுக்கும் இடையே இருவழி கருத்துப் பரிமாற்ற முறை குறித்துப் பேசிய திரு சீ, நிறுவனங்கள் கருத்துகளைப் பதிவிடும் வசதி, கட்டட கட்டுமான ஆணைய இணையத்தளத்தில் மார்ச் முதல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மே மாதம் முதல் நிறுவனங்கள் அரசாங்க அமைப்புகளை மதிப்பிட ஆண்டுக் கருத்தாய்வு இடம்பெறும். இது நியாயமான மதிப்பீட்டு முறையை உறுதிசெய்ய உதவும்.

மே மாதம் தொடங்கும் இந்தச் சேவையில் நிறுவனங்கள், பொதுத் துறை அமைப்புகள் குறித்த கருத்துகளைப் பதிவு செய்யலாம்.

“மேம்பாடு தேவைப்படும் துறைகளைக் கண்டறிய இந்தப் புதிய கருத்துத் தளங்களை ஆலோசனை நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்று அமைச்சர் சீ கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்