சில விமானச்சேவைகளில் குறைவான பயண நேரம்; சிங்கப்பூர் உள்ளிட்ட 6 நாடுகள் சோதனை முயற்சி

2 mins read
5c5d8f21-aa5f-40ca-9023-3750418979ad
15 மாதம் நீடித்த சோதனை முயற்சியில் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஃபிஜி, இந்தோனீசியா, நியூசிலாந்து, பாப்புவா நியூ கினி ஆகியவை பங்கெடுத்தன. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்கும் மெல்பர்ன், சிட்னி, பிரிஸ்பன், ஆக்லாந்து போன்ற நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் குறையும் என்று பயணிகள் எதிர்பார்க்கலாம். குறிப்பிட்ட சில விமானச் சேவைகளின் பயண நேரம் குறைவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. விமானிகள் நேரடியான, குறுகிய பாதைகளைத் தெரிவுசெய்யவிருப்பதே அதற்குக் காரணம்.

திறம்பட்ட முறையில் எரிபொருளையும் பயணப் பாதைகளையும் பயன்படுத்தி விமானிகள் 15 மாதம் விமானத்தைச் சோதனை அடிப்படையில் இயக்கிப் பார்த்தனர். அவ்வாறு செய்ததில், பயண நேரத்தைக் குறைக்கமுடியும் என்பதை அவர்கள் கண்டறிந்தனர். அத்துடன், காற்றின் நிலைமை சாதகமாக இருக்கும்போது எரிபொருளை மிச்சப்படுத்த முடியும் என்பதும் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும் என்பதும் முன்னோட்டப் பயணங்களில் தெரியவந்தன.

முன்னோட்டப் பயணம் அக்டோபர் 31ஆம் தேதி முடிவுக்கு வந்தது. விமான நிறுவனங்கள், திறம்பட்ட பயணப் பாதைகளுக்குத் தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என்று சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. புதிய முயற்சிக்கு ஆறு நாடுகள் ஆதரவளித்துள்ளன.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஃபிஜி, இந்தோனீசியா, நியூசிலாந்து, பாப்புவா நியூ கினி ஆகியவை அதில் இணைந்துள்ளன.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் நியூசிலாந்து உள்ளிட்ட எட்டு விமான நிறுவனங்களைச் சேர்ந்த விமானிகள், 70 நகரங்களுக்கு இடையில் நேரடியான திறம்பட்ட பயணப் பாதைகளைத் தெரிவுசெய்ய அனுமதிக்கப்படுவர். எதிர்காலத்தில் அந்த எண்ணிக்கையை அதிகரிக்கும் வழிகளையும் ஆணையம் ஆராய்கிறது.

அத்தகைய பாதைகள் பயண நேரத்தைக் குறைப்பதற்கும் அப்பால், ஆகாயத்தில் விமானங்கள் ஆட்டங்காணும் பகுதிகளைத் தவிர்க்கவும் விமானிகளுக்கு உதவக்கூடும். எரிபொருளை மிச்சப்படுத்துவதால் செயல்முறைச் செலவும் குறையக்கூடும்.

அதனால் விமானக் கட்டணமும் குறையக்கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஜெட்ஸ்டார் ஏர்வேஸ், குவான்டாஸ், ஃபிஜி ஏர்வேஸ், கேத்தே பசிபிக், கருடா இந்தோனீசியா, ஏர் நியூசிலாந்து, இவிஏ ஏர்வேஸ் ஆகியவையே புதிய முயற்சியில் பங்கெடுக்கும் எட்டு விமான நிறுவனங்கள். நீக்குப்போக்கான பயணப் பாதைகளைத் தெரிவுசெய்ய அவை அனுமதிக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்