சிங்கப்பூர்-கம்போடியா, சிங்கப்பூர்-தாய்லாந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானச் சேவைகள் இயல்பாகச் செயல்பட்டு வருகின்றன.
கம்போடிய-தாய்லாந்து எல்லைப் பகுதியில் மோசமான பூசல் ஏற்பட்டுள்ள நிலையில் எஸ்ஐஏ குழுமம் இதனைத் தெரிவித்துள்ளது. தங்கள் வாடிக்கையாளர்கள், ஊழியர்களின் பாதுகாப்புக்குத்தான் தொடர்ந்து முன்னுரிமை வழங்கப்படும் என்று அதன் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
“நிலைமையைத் தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணித்து எங்கள் விமானச் சேவையைத் தேவைக்கேற்ப மாற்றியமைப்போம்,” என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே பல காலமாகத் தொடரும் எல்லை தொடர்பான கருத்து வேறுபாடு இம்மாதம் 24ஆம் தேதி மோசமான வன்முறையாக உருவெடுத்தது. இரு தரப்பு ராணுவப் படைகளும் மோதிக்கொண்டன.
அந்த மோதல்களில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர்.
அப்பூசல், 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் கருத்துவேறுபாட்டில் அங்கம் வகிக்கிறது. தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் ஆகிய மூன்று நாடுகளின் எல்லைப் பகுதிகளும் சந்திக்கும் எமரல்ட் முக்கோணப் (Emerald Triangle) பகுதியின் சில இடங்கள் இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ளன.
எல்லைப் பூசல் குறித்து சமரசப் பேச்சுவார்த்தை நடத்த தாய்லாந்து, கம்போடியத் தலைவர்கள் திங்கட்கிழமை (ஜூலை 28) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள அந்நாட்டுப் பிரதமர் அலுவலகத்தில் சந்திக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.