சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் ஏற்பாடு செய்துள்ள ‘சிஃபாஸ் பொது வரவேற்பு 2026’ நிகழ்ச்சி வரும் ஜூலை 18, 19 தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி, காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை மிடில் ரோடில் அமைந்துள்ள சிஃபாஸ் வளாகத்தில் நடைபெறும்.
குழந்தைகள், இளையர்கள், பெரியவர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் இந்தியப் பாரம்பரிய கலைகளைப் பற்றி அறிந்துகொள்ளும் வகையில் இந்த நிகழ்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் ஊடாடும் பயிலரங்குகள், அறிமுக வகுப்புகள், செயல்முறை விளக்கங்கள் மற்றும் நேரடி நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
பரதநாட்டியம், கதக், குச்சிப்புடி, கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை, தபேலா, மிருதங்கம், சிதார், ஹார்மோனியம், கீபோர்டு மற்றும் காட்சி கலைகள் உள்ளிட்ட பல கலைவடிவங்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும்.
மேலும், பங்கேற்பாளர்கள் சிஃபாஸ் கலை ஆசிரியர்களையும் மாணவர்களையும் சந்தித்து, பாடநெறிகள் குறித்த ஆலோசனைகளைப் பெறவும் வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த நிகழ்வின் போது பதிவு செய்யும் மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. அனைத்து புதிய மாணவர் சேர்க்கைக்கும் $100 பதிவுக் கட்டணம் முழுமையாக விலக்கப்படும்.
60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோர்களுக்கு இரண்டாவது மாத கல்விக் கட்டணத்தில் 20 விழுக்காடு விலைக்கழிவு வழங்கப்படும். புதிய பதிவுகளுக்கு, இருப்பு உள்ளவரை இலவசப் பரிசுப் பையும் உண்டு.
ஆயுள்கால உறுப்பினராகப் பதிவு செய்வோருக்கு, ஓர் ஆண்டிற்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து சிஃபாஸ் இணைப்பு நிகழ்ச்சிகளுக்கான இரண்டு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்படும். ஒவ்வொரு புதிய பாடப் பதிவுக்கும் அதிர்ஷ்டக் குலுக்கலில் ஒரு வாய்ப்பு வழங்கப்படும்; இதிலிருந்து ஒவ்வொரு நாளும் இரவு 9.00 மணிக்கு மூன்று வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு இரண்டாவது மாத கட்டணத்தில் 20 விழுக்காடு தள்ளுபடி அளிக்கப்படும்.
பள்ளியின் புதிய அல்லது தற்போதுள்ள மாணவர்கள் பதிவு செய்யும் குறுகிய காலப் பாடங்களுக்கும் புத்தகங்களுக்கும் 20 விழுக்காடு தள்ளுபடியும் , மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலைப் பாடங்களுக்குப் பதிவு செய்யும் போது சிறப்புத் தொகுப்புச் சலுகையாக ஆறு மாத கல்விக் கட்டணத்தில் 10 விழுக்கா தள்ளுபடியும் கிடைக்கும். இந்தச் சலுகைகள் அனைத்திற்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.
1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட சிஃபாஸ் (SIFAS), இந்தியப் பாரம்பரிய இசை, நடனம், காட்சிச் கலைகள் ஆகியவற்றைக் கற்பித்தல், மேம்படுத்துதல், பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட சிங்கப்பூரின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.
மேல் விவரங்களுக்கு www.sifas.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். அத்துடம் https://forms.gle/pMet5oU2wUHtL9Rk6 என்ற இணையதள முகவரி மூலம் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளுமாறு வருகையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

