நிச்சயமற்ற புவிசார் அரசியல் சூழலிலும் ஒரு வெளிச்சம் தெரிகிறது. ஆசியான் கூட்டமைப்பின் தலைவர்கள் மிகவும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை முன்னெப்போதையும்விட தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் ஆசியான் தலைவர்களின் ஒற்றுமையையும் வட்டாரத்தின் பொருளியலை வலுப்படுத்த ஆழமான ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பில் கவனம் செலுத்துவதையும் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
“பிரச்சினைகள் இருக்கும், வேறுபாடுகள் இருக்கும், ஆனால் நாம் பிளவுபடக் கூடாது. ஆசியானைப் பிளவுபடுத்தும் சர்ச்சைகளை அனுமதிக்கக் கூடாது. இதில் மிகவும் வலுவான அர்ப்பணிப்பு உணர்வு உள்ளது,” என்றார் அவர்.
கோலாலம்பூரில் 47வது ஆசியான் உச்சநிலைக் கூட்டம் மற்றும் அது தொடர்பான கூட்டங்கள் முடிவடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 28) திரு வோங் பேசினார்.
திமோர் லெஸ்டே ஆசியானில் 11வது உறுப்பினராகச் சேர்ந்ததன் மூலம் 26 ஆண்டுகளில் முதல் முறையாக ஆசியான் விரிவடைந்தது, இது ஒரு வரலாற்று மைல்கல். எனினும், பொருளியல் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மேலும் தேவை என்றார் அவர்.
ஆசியானில் ஏற்றுக்கொள்ளப்படுவது முதல் படி. ஆசியானின் ஒரு பகுதியாக இருப்பதன் நன்மைகளை முழுமையாகப் பெற, மேலும் தங்கள் பொருளியலை ஆசியானின் மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திமோர் லெஸ்டே ஒருங்கிணைந்து திறனை வளர்க்க சிங்கப்பூர் தனது பங்கைச் செய்யும் என்ற திரு வோங், அந்நாட்டுக்கு வருகைதர தாம் ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார்.
மலேசியத் தலைமைத்துவத்தின்கீழ், ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு உடன்பாடு, ஆசியான் பொருள்கள் வர்த்தக ஒத்துழைப்பு மேம்பாடு உள்ளிட்ட மற்றத் துறைகளிலும் ஆசியான் முன்னேற்றம் கண்டது. சுங்கச்சாவடி சீரமைப்புக்கு உறுதிபூண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தற்போதைய உத்வேகத்தைக் கட்டிக்காக்க, எதிர்காலத் தலைமைத்துவத்துக்குச் சிங்கப்பூர் ஆதரவளிக்கும் என்றார் பிரதமர் வோங்.
ஆசியான் ஒன்றிணைக்கப்படாவிட்டால் என்ன ஆபத்து என்ற கேள்விக்கு, “அனைத்தும் ஆபத்தில் உள்ளன. புதிய சமநிலை என்ன வடிவமாக இருக்கும் என்பது நமக்குத் தெரியாது,” என்றார்.
ஒத்துழைப்பு ‘மாயாஜாலத்தில் நடக்காது’. தென்கிழக்காசியா அதைத் தானாகவே செய்யத் தொடங்க வேண்டும்.
ஆசியான் இந்தப் புதிய பழக்கவழக்கங்கள், புதிய விதிமுறைகள், புதிய நடைமுறைகள், ஒத்துழைப்புக்கான புதிய மாதிரிகளை அறிமுகப்படுத்தத் தொடங்க வேண்டும்.
“நாம் அதை ஆசியானுக்குள் செய்ய வேண்டும். ஆசியானுக்கு வெளியே மற்ற நாடுகளுடன் ஈடுபாட்டை வழிநடத்த ஆசியான் தொடர்புடைய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்,
இந்த ஆண்டு கனடா, பிரேசில் போன்ற வெளிப்புறப் பங்காளிகளுடன் தொடர்புகளை உருவாக்கி விரிவுபடுத்தியதை மற்றொரு முக்கியச் சாதனையாக அவர் சுட்டினார்.
“நமது பொருளியல்களை மேலும் ஒருங்கிணைக்க, தொடர்ந்து கூடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்வோம். அது மிகப் பெரிய முயற்சியாகத் தோன்றாது, ஆனால் சிலருக்கு அதிகரிப்பதாகத் தெரியலாம். எனினும், தலைவர்களிடையே கடப்பாடு உறுதியாக உள்ளது. நாம் தொடர்ந்து சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறோம்,” என்று திரு வோங் கூறினார்.

