சிம் அட்டை பதிவு மோசடி; இருவர் கைது, எண்மரிடம் விசாரணை

1 mins read
ee061fdf-a304-4b2f-9d8d-500b054c6f55
சிம் அட்டைகள், கைப்பேசிகள் போன்றவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். - படம்: சிங்கப்பூர் காவல்துறை

சிம் அட்டை பதிவு மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு 30 மற்றும் 58 வயது.

மூன்று கைப்பேசிக் கடைகளில் காவல்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தியதை அடுத்து, இந்த இருவரும் பிடிபட்டனர்.

அதிரடிச் சோதனை மார்ச் 5ல் நடைபெற்றது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக எட்டு பேரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களில் ஏழு ஆடவர்களும் ஒரு பெண்ணும் அடங்குவர்.

அவர்கள் 27 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்று காவல்துறை வியாழக்கிழமை (மார்ச் 20) கூறியது.

182 சிராங்கூன் சாலையில் உள்ள ஏஆர்எஸ் டிஜிட்டல் வோர்ல்டு, 256 சிராங்கூன் சாலையில் உள்ள யுனிவர்செல் மொபைல்ஸ் டெக்னாலஜி, 200 உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டையில் உள்ள இக்காரெஸ் மொபைல் சர்வீசஸ் ஆகிய கைப்பேசிக் கடைகளில் அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தினர்.

உரிமம் இல்லாமல் கடன் கொடுப்பவர்களுக்கு எதிராகக் குற்றப் புலனாய்வுத்துறையின்கீழ் செயல்படும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அதிரடிச் சோதனையை நடத்தினர்.

தனிநபர் விவரங்களைச் சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்டது, கணினி தொடர்பான சாதனங்களை அனுமதியில்லாமல் மாற்றி அமைத்தது, சிம் அட்டை பதிவு மோசடியில் ஈடுபட்டது ஆகியவை தொடர்பாக பத்து சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒவ்வொரு குற்றத்துக்கும் $10,000 அபராதம், மூன்று ஆண்டுகள் வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்