வெளிநாட்டு ஊழியர்களையும் தொண்டூழியர்களையும் இணைத்த உருட்டுபந்து

வெளிநாட்டு ஊழியர்களையும் தொண்டூழியர்களையும் இணைத்த உருட்டுபந்து

3 mins read
84c8b4aa-7ecf-46df-9733-5c2ba0efbdf6
சிங்கப்பூர் லேண்ட் குழுமம், ‘ரே ஆஃப் ஹோப்’ அறநிறுவனத்துடன் இணைந்து தெமாசெக் மன்றத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உருட்டுபந்து விளையாட்டு நிகழ்ச்சியை நடத்தியது. - படம்: சிங்லேண்ட்
Google News Preferred Icon

சிங்கப்பூர் லேண்ட் குழுமம் (சிங்லேண்ட்), ‘சிங்லேண்ட் எலிவேட்ஸ்’ என்ற அதன் சமூக நீடித்த நிலைத்தன்மைத் திட்டத்தின்கீழ், வெளிநாட்டு ஊழியர்களுக்கு உருட்டுபந்து நிகழ்ச்சி ஒன்றை ஆகஸ்ட் 16ஆம் தேதி தெமாசெக் மன்றத்தில் நடத்தியது. 

‘ரே ஆஃப் ஹோப்’ எனும் அறநிறுவனத்துடன் இணைந்து குழுமம் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.

மூன்று தங்கும் கூடங்களைச் சேர்ந்த 40 வெளிநாட்டு ஊழியர்கள், சிங்லேண்ட் குழுமத்தின் 40 தொண்டூழியர்கள், ‘ரே ஆஃப் ஹோப்’ அறநிறுவனத்தில் இதற்கு முன்பு பயன்பெற்ற 10 பேர், ‘இம்பார்ட்’ அறநிறுவனத்தைச் சேர்ந்த 10 இளைய தொண்டூழியர்கள் ஆகியோர் உருட்டுபந்து விளையாட்டில் கலந்துகொண்டனர். 

விளையாட்டின் மூலம் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்தவர்களை ஒன்றுசேர்த்து, நட்பை வளர்ப்பதும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை ஊக்குவிப்பதும் நிகழ்ச்சியின் முதன்மை நோக்கம்.

“இந்த ஆகஸ்ட் மாதத்தில் தேசிய தினத்தைக் கொண்டாடும் வேளையில், சிங்கப்பூரில் இருக்கும் அனைவரின் மீதும் அக்கறை காட்டுவதன் முக்கியத்துவத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தொண்டூழியத் திட்டத்தின் மூலம் எங்கள் நிறுவனத்தின் ஊழியர்கள், வெளிநாட்டு ஊழியர்கள், இளையர் ஆகியோர் கலந்துபேசவும் உண்மையான பிணைப்புகளை உருவாக்கிக்கொள்ளவும் நாங்கள் விரும்பினோம். இதுவே சிங்லேண்ட் எலிவேட்ஸ் திட்டத்தின் முக்கிய நோக்கம்,” என்றார் சிங்லேண்ட் குழுமத்தின் நீடித்த நிலைத்தன்மை, திட்ட மேம்பாட்டுப் பிரிவுத் தலைவர் ஹெங் சின் ஹோங்.

சிங்கப்பூரில் 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவரும் துரைராஜ் மணிகண்டன்.
சிங்கப்பூரில் 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவரும் துரைராஜ் மணிகண்டன். - படம்: சிங்லேண்ட்

“இதில் பங்கேற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனது குழுவில் சிங்லேண்ட் ஊழியர் ஒருவரும் அவருடைய 12 வயதுக் குழந்தையும் இருந்தனர். அவர் என்னை இன்னும் அதிகமாகப் பேசும்படி ஊக்குவித்தார். எங்கள் உரையாடலிலிருந்து அவரைப் பற்றி நிறையக் கற்றுக்கொண்டேன்,” என்று கூறினார் நிகழ்வில் பங்கேற்ற 39 வயது துரைராஜ் மணிகண்டன்.

சிங்கப்பூரில் 19 ஆண்டுகளாக வேலை செய்யும் பாண்டியன் செல்வமுருகன்.
சிங்கப்பூரில் 19 ஆண்டுகளாக வேலை செய்யும் பாண்டியன் செல்வமுருகன். - படம்: சிங்லேண்ட்

“இன்றைய உருட்டுபந்து நிகழ்ச்சி, வெளிநாட்டு ஊழியர்களுக்கும் சிங்கப்பூர்க் குடிமக்களுக்கும் இடையில் பிணைப்பை வலுப்படுத்தியது. குறிப்பாகப் பல்கலைக்கழக மாணவர்களுடன் உரையாடியது எனக்குப் பிடித்திருந்தது. நாட்டின் எதிர்காலத் தூண்களான மாணவர்களைப் பற்றியும் வெளிநாட்டு ஊழியர்களைப் பற்றியும் புரிந்துகொள்வது மிக அவசியம்,” என்று கட்டுமானத் துறையில் மூத்த மேற்பார்வையாளராகப் பணிபுரியும் 37 வயது பாண்டியன் செல்வமுருகன் கூறினார். அவர் ‘ரே ஆஃப் ஹோப்’ அறநிறுவனம் இவ்வாண்டு அறிமுகப்படுத்திய பயிற்சித் திட்டத்திலும் பங்கேற்றுள்ளார்.

வெளிநாட்டு ஊழியர்கள் சக ஊழியர்களின் நிதிப் பிரச்சினைகளையும் மன அழுத்தத்தையும் கண்டறிந்து, அவர்களுக்கு ஆதரவளிக்க அந்தப் பயிற்சித் திட்டம் கற்றுக்கொடுக்கிறது. அவசர உதவிக்கு எந்த நிறுவனங்களைத் தொடர்புகொள்வது, தேவையான ஆவணங்களை எப்படிச் சேகரிப்பது போன்றவற்றையும் அது சொல்லித்தருகிறது.

“சமுதாயத்தில் பின்தங்கி இருப்பவர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பதே எங்களின் நோக்கம். எங்களுடன் தொண்டூழியர்களாகப் பணியாற்றும் வெளிநாட்டு ஊழியர்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப விரும்புகிறோம்,” என்றார் ‘ரே ஆஃப் ஹோப்’ அறநிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அலீசியா அல்டோர்ஃபர்-ஓங். 

2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘சிங்லேண்ட் எலிவேட்ஸ்’ திட்டத்தின்வழி இதுவரை 8,000க்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர். உடற்குறையுடையோர், முதியோர், வெளிநாட்டு ஊழியர்கள், இளையர் ஆகிய நான்கு பிரிவினர்க்கு 4 மில்லியன் வெள்ளிக்கும் மேல் நிதி வழங்கப்பட்டுள்ளது.

2025ல், ‘த மஜுரிட்டி டிரஸ்ட்’ எனும் மற்றோர் அறநிறுவனத்துடன் இணைந்து மூன்று ஆண்டுகளுக்கு 1 மில்லியன் வெள்ளி மதிப்பிலான நிதியை சிங்லேண்ட் நிறுவியது. அதில் 330,000 வெள்ளி நிதி இவ்வாண்டு ஜூலையில் நான்கு பிரிவினர்க்கும் கொடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்