உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் 10வது இடத்தில் சிங்கப்பூர்

முதல் ஒன்பது இடங்களில் ஐரோப்பிய நாடுகள்

உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் பட்டியலில் 10வது இடத்தில் சிங்கப்பூர்

2 mins read
254579a0-407d-4161-bdb5-b838ac4a0253
உலகின் சக்திவாய்ந்த கடப்பிதழ் குறியீட்டில் முதல் பத்து இடங்களுக்குள் வந்த ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர்.  - கோப்புப் படம்: சாவ் பாவ்

உலகின் மிக சக்திவாய்ந்த கடப்பிதழ் கொண்ட நாடுகள் வரிசையில் சுவீடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. சிங்கப்பூர் 10வது இடத்தில் உள்ளது.

குடிமக்கள், குடியுரிமைத் திட்டமிடல் ஆலோசனை நிறுவனமான ‘குளோபல் சிட்டிசன் சொல்யூஷன்ஸ்’ 2026ஆம் ஆண்டிற்கான உலக கடப்பிதழ் தரவரிசையை சனிக்கிழமை (ஜூலை 4) வெளியிட்டுள்ளது.

நாடுகளின் வாழ்க்கைத் தரம், பயணங்களுக்கான விசா இல்லா அனுமதி, முதலீட்டு ஈர்ப்பு ஆகிய மூன்று முக்கியக் காரணிகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது

ஸ்வீடன் பயண அனுமதியில் 11வது இடத்தையும், முதலீட்டில் 9வது இடத்தையும், வாழ்க்கைத் தரத்தில் 2வது இடத்தையும் பெற்று முதலிடத்தை எட்டியுள்ளது.

சிங்கப்பூர், வாழ்க்கைத் தரத்தில் 115வது இடத்திற்குத் தள்ளப்பட்ட போதிலும் விசா இல்லா பயண அனுமதி, முதலீட்டு வாய்ப்புகளில் முதலிடங்களைப் பெற்றதன் மூலம் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் பத்து இடங்களுக்குள் வந்த ஒரே ஆசிய நாடு சிங்கப்பூர்.

விசா இல்லாத பயண அனுமதியை மட்டுமே அடிப்படையாகக்கொண்டு காலாண்டுக்கு ஒருமுறை வெளியிடப்படும் ‘ஹென்லி கடப்பிதழ் குறியீட்டில்’ (Henley Passport Index 2026), 192 நாடுகளுக்கு விசா இன்றிச் செல்லும் அனுமதியோடு சிங்கப்பூர் உலகின் மிகச் சக்திவாய்ந்த கடப்பிதழாக முதலிடத்தில் உள்ளது.

முதல் ஒன்பது இடங்களை ஐரோப்பிய நாடுகள் ஆக்கிரமித்துள்ளன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஸ்வீடனைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்து, பின்லாந்து, ஜெர்மனி, நெதர்லாந்து, டென்மார்க், அயர்லாந்து, இங்கிலாந்து, நார்வே ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

அமெரிக்காவும் பிரான்சும் 11வது இடத்தையும், கனடா 13வது இடத்தையும் பிடித்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளின் இந்த ஒட்டுமொத்த ஆதிக்கத்திற்குக் காரணம் பொருளியல் வாழ்க்கைத் தரம் போன்ற அனைத்து அம்சங்களிலும் அவை கொண்டுள்ள சீரான சமநிலை என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பட்ரிஷியா காசாபுரி தெரிவித்துள்ளார்.

125வது இடத்தில் இந்தியா

பட்டியலில் இந்தியா 125வது இடத்திற்குச் சரிந்துள்ளது. 2025ல் 124வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது மீண்டும் பின்னோக்கி சரிந்துள்ளது. பிலிப்பீன்ஸ், மொராக்கோ, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்குப் பின்னால் இந்தியா வந்துள்ளது.

இந்தியக் கடப்பிதழுக்கு 26 நாடுகள் மட்டுமே விசா இல்லாத பயண அனுமதியை வழங்குகின்றன.

இந்தியக் கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் பூட்டான், நேப்பாளம், ஜமைக்கா போன்ற நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும் என்றாலும், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் உள்ளிட்ட கிட்டத்தட்ட 88 நாடுகளுக்குச் செல்ல இன்னும் விசா தேவைப்படுகிறது.

சீனா 104வது இடத்தைப் பிடித்து இந்தியாவைவிட முன்னிலையில் உள்ளது. எனினும், பங்ளாதேஷ் 166வது இடம், நேப்பாளம் 164வது இடம், பாகிஸ்தான் 188வது இடங்களில் வந்துள்ளன. இந்நாடுகளைவிட இந்தியாவின் கடப்பிதழ் சக்திமிக்கதாக உள்ளது.

குறிப்புச் சொற்கள்