சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான 35 ஆண்டுகால அரசதந்திர உறவைப் பறைசாற்றும் வகையில், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 3) சிங்கப்பூர்த் தலைவர்கள் சீனத் தலைவர்களுக்கு வாழ்த்துக் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.
சீன அதிபர் ஸி ஜின்பிங்கிற்குக் கடிதம் அனுப்பிய அதிபர் தர்மன் சண்முகரத்னம், இருநாட்டுக்கும் இடையிலான உறவு முன்னோக்குப் பார்வையாலும் முன்னோடித் தலைவர்களின் முயற்சியாலும் உருவாக்கப்பட்டது என்றார். அவர் குறிப்பாக, 1970களில் உறவுக்கு அடித்தளம் போட்ட திரு லீ குவான் யூவையும் திரு டெங் சியாவ்பிங்கையும் சுட்டினார்.
அவர்கள் விதைத்த அந்த உறவு இன்று நெருக்கமான, விரிவான பங்காளித்துவமாக மலர்ந்துள்ளது என்றார் திரு தர்மன்.
2023ஆம் ஆண்டு சிங்கப்பூரும் சீனாவும் இருதரப்பு உறவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றதாகவும் திரு தர்மன் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரும் சீனாவும் தொடர்ந்து இணக்கமாகச் செயல்பட்டு இருநாட்டு நட்புறவை இன்னும் உயரத்திற்கு எடுத்துச் செல்லும் என்பதில் நம்பிக்கைக் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
சீனப் பிரதமர் லீ சியாங்கிற்குக் கடிதம் எழுதிய திரு லாரன்ஸ் வோங், 1990ஆம் ஆண்டு அக்டோபர் 3ஆம் தேதிக்கு முன்பே சிங்கப்பூர், சீன உறவு தொடங்கிவிட்டது என்றார்.
கடந்த ஆண்டுகளில் இருநாட்டு உறவு வலுவடைந்துள்ளதாகச் சொன்ன அவர், ஒன்று மற்றதைப் புரிந்துகொள்ள தயாராக இருந்தது என்றார்.
துணைப் பிரதமர் கான் கிம் யோங்கும் சீனத் துணைப் பிரதமர் டிங் சுவெசியாங்கிற்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பினார்.
தொடர்புடைய செய்திகள்
உலகில் நிச்சயமற்ற சூழல் அதிகரித்துவரும் வேளையில் இருநாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம் என்றார்.

