தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மறுபயனீட்டு எரிசக்தி, சுகாதாரப் பராமரிப்பில் சிங்கப்பூர் - பிலிப்பீன்ஸ் கூடுதல் ஒத்துழைப்பு

2 mins read
764ec1f6-ded7-46ea-9606-c0bbfc86256e
பிரதமர் லாரன்ஸ் வோங்கும் (இடமிருந்து இரண்டாவது) பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியரும் கைகுலுக்குகின்றனர். - படம்: ஏஎஃப்பி

சிங்கப்பூரும் பிலிப்பீன்சும் பல்வேறு அம்சங்களில் கூடுதலாக ஒத்துழைக்கவுள்ளன.

மறுபயனீட்டு எரிசக்தி, நீடித்த நிலைத்தன்மை, சுகாதாரப் பராமரிப்பு, அரசாங்கத் துறை மேம்பாடு போன்றவை அவற்றில் அடங்கும். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங், பிலிப்பீன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்க்கோஸ் ஜூனியர் இருவரும் புதன்கிழமை (ஜூன் 4) கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் இதனை அறிவித்தனர்.

பிரதமர் வோங், பிலிப்பீன்சுக்கு அறிமுகப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் முதல் நாளான புதன்கிழமை இந்த அறிவிப்பு இடம்பெற்றது.

பிலிப்பீன்ஸ் அதிபர் மாளிகையில் அந்த செய்தியாளர் கூட்டம் நடந்தது. இரு தலைவர்களும் சந்தித்த பிறகு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் திரு வோங், தமக்கு அழைப்பு விடுத்ததற்காக திரு மோர்க்கோசுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். சிங்கப்பூர்-பிலிப்பீன்ஸ் இருதரப்பு உறவு இதைவிட சிறப்பாக இருந்ததில்லை என்றும் திரு வோங் பாராட்டிப் பேசினார்.

“இந்தப் பங்காளித்துவம், பல ஆண்டுகளாகப் பல தலைவர்களாலும் அதிகாரிகளாலும் கவனமாக வளர்க்கப்பட்டது,” என்றும் அவர் சொன்னார்.

மறுபயனீட்டு எரிசக்தியைப் பொறுத்தவரை, சிங்கப்பூரும் பிலிப்பீன்சும் இருதரப்பு, வட்டார ஒத்துழைப்பு ஆகிய இருவகை ஒத்துழைப்பையும் வலுப்படுத்த ஒப்புக்கொண்டன. அதோடு, ஆசியான் மின்சக்தி மையத்தை (power grid) உருவாக்க எடுக்கப்படும் முயற்சிகளை தீவிரப்படுத்தவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

ஆசியான் மின்சக்தி மையம், 2045ஆம் ஆண்டுக்குள் அதன் 10 உறுப்பு நாடுகளின் மின்சாரக் கட்டமைப்புகளை இணைக்கும். அதன் மூலம் அவற்றுக்கிடையே எல்லை தாண்டிய மின்சக்திப் பகிர்வு சாத்தியமாகும்.

நீடித்த நிலைத்தன்மை பொறுத்தவரை இரு நாடுகளும் கரிமப் புள்ளிப் பகிர்வு ஒப்பந்தம் ஒன்றை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்துவருகின்றன. பாரிஸ் ஒப்பந்தத்தின் ஆறாம் பிரிவுக்கு இணங்க கரிமப் புள்ளிப் பகிர்வு ஒப்பந்தத்தின் அம்சங்கள் இடம்பெறும்.

மேலும், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பது குறித்து இரு நாடுகளின் சுகாதார அமைச்சுகளும் ஆலோசித்துவருவதாக திரு வோங்கும் திரு மார்க்கோசும் தெரிவித்துள்ளனர். பிலிப்பீன்ஸ் ஊழியர்களின் திறன்களை வளர்த்து அவர்களை மீண்டும் அந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பில் சேர்ப்பது போன்றவை அதன்கீழான நடவடிக்கைகளில் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்