உணவுப் பாதுகாப்பு, எரிசக்திப் பாதுகாப்பு, பசுமைப் பொருளியல், மின்னிலக்க இணைப்பு உட்பட புதிய துறைகளில் சிங்கப்பூரும் தாய்லாந்தும் தங்களின் ஒத்துழைப்பை விரிவுபடுத்த உள்ளன.
மேலும், தற்காப்பு, வர்த்தகம், முதலீடு ஆகியவற்றில் தற்போதுள்ள தங்களின் ஒத்துழைப்பை மேலும் வலுவாக்க இரு நாடுகளும் திட்டமிட்டுள்ளன.
கரிம ஊக்கப் புள்ளிகள் (carbon credits) தொடர்பாக தாய்லாந்துடன் இணைந்து செயல்பட சிங்கப்பூர் ஆர்வம் கொண்டுள்ளதாகவும் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பேங்காக்கில் உள்ள அரசாங்கக் கட்டடத்தில் நவம்பர் 28ஆம் தேதி தாய்லாந்து பிரதமர் பெடோங்டார்ன் ஷினவாத்துடன் நடந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் வோங் இவ்வாறு கூறியிருந்தார்.
“பசுமை மின்சார உற்பத்தியைத் தாய்லாந்து முடுக்கியுள்ளது. அதனால் கரிம ஊக்கப் புள்ளிகள் தொடர்பான ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தத்தை நடப்புக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு இரு நாடுகளும் திட்டமிடலாம். இருநாட்டு நிறுவனங்களுக்கும் இது புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும்,” என்று நம்பிக்கை தெரிவித்தார் திரு வோங்.
பாப்புவா நியூ கினி, கானா ஆகியவற்றுடன் சிங்கப்பூர் இத்தகைய ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. ஆனால், கரிம ஊக்கப் புள்ளிகளை இதுவரை வர்த்தக ரீதியாகக் கையாளவில்லை.
திட்டத்தை நடப்புக்குக் கொண்டு வரும் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தாகியதும் கரிம வரி செலுத்த வேண்டிய சிங்கப்பூர் நிறுவனங்கள் தங்களின் வரிப் பணத்தை 5% வரை குறைப்பதற்கு, கரிம ஊக்கப் புள்ளிகளைப் பங்காளி நாடுகளின் திட்டங்களிலிருந்து வாங்க இயலும்.
பசுமைத் தொழில்நுட்பங்கள், புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியில் முதலீடுகள் ஆகிய அம்சங்களில் ஒத்துழைப்பது தொடர்பாகவும் இரு நாடுகள் கலந்து பேசியதாக பிரதமர் பெடோங்டார்ன் குறிப்பிட்டார். இந்த ஒத்துழைப்புவழி, இரு நாடுகளும் கரிமப் பயன்பாடு தொடர்பான தங்களின் கடப்பாடுகளை நிறைவேற்ற முடியும் என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
உணவுப் பாதுகாப்பு குறித்து பேசிய பிரதமர் வோங், “நாம் உட்கொள்ளும் பெரும்பாலானவற்றை இறக்குமதி செய்கிறோம். தொடர்ந்து தமது உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம். அதனால், சிங்கப்பூருக்கு இதுவும் முக்கியம்,” என்றார்.
நிதி அமைச்சராகவும் உள்ள பிரதமர் வோங், பிரதமர் பெடோங்டார்ன் அழைப்பை ஏற்று தாய்லாந்து தலைநகருக்குத் தமது அறிமுகப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவருடன் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், பிரதமர் அலுவலக மற்றும் வெளியுறவு அமைச்சின் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.

