சிங்கப்பூருடன் முதலாவது தென்கிழக்காசிய நாடாகத் தாய்லாந்து கரிம வணிக உடன்பாடு செய்துகொண்டுள்ளது.
இதனையடுத்து, தாய்லாந்திடமிருந்து கரிம ஊக்கப் புள்ளிகளை சிங்கப்பூர் வாங்குவதற்கு வழி ஏற்பட்டுள்ளது.
அந்த இருதரப்பு உடன்பாட்டின் மூலம் சிங்கப்பூர் அரசாங்கமோ இங்குள்ள கரிம வரிப் பொறுப்பு நிறுவனங்களோ தாய்லாந்திடமிருந்து கரிம ஊக்கப் புள்ளிகளை வாங்கலாம். அதன் விளைவாக, புவியைச் சூடாக்கும் கரிம வாயுக்களின் வெளியேற்ற அளவில் சிறுபகுதியைத் தாய்லாந்தால் குறைத்துக் காட்ட இயலும்.
மனிதவள அமைச்சரும் எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பத்திற்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு டான் சீ லெங்கும் தாய்லாந்து இயற்கை வள, சுற்றுப்புற அமைச்சர் சலெம்சாய் ஸ்ரீ ஆனும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) நடந்த ஒன்பதாவது சிங்கப்பூர் வட்டாரத் தொழில் கருத்தரங்கின்போது அந்த உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.
அந்த வருடாந்தர நிகழ்விற்கு சிங்கப்பூர்த் தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
கரிம ஊக்கப் புள்ளி தொடர்பில் சிங்கப்பூர் செய்துகொண்டுள்ள ஒன்பதாவது உடன்பாடு இது. இதற்குமுன் பாப்புவா நியூ கினி, கானா, பூட்டான், பெரு, சிலி, ருவாண்டா, பராகுவே ஆகிய நாடுகள் சிங்கப்பூருடன் அத்தகைய உடன்பாட்டைச் செய்துகொண்டுள்ளன.
கரிம வாயுக்கள் வெளியீட்டைக் குறைப்பதை ஊக்குவிக்கும் உயர்தரக் கரிம ஊக்கப் புள்ளித் திட்டங்களை எப்படி வகுப்பது என தென்கிழக்காசிய நாடுகளுக்கு இந்த உடன்பாடு எடுத்துக்காட்டுவதாக இருக்கும் என்று டாக்டர் டான் நம்பிக்கை தெரிவித்தார்.
“சிங்கப்பூரும் தாய்லாந்தும் வணிகம், முதலீடு, நீடித்த வளர்ச்சி ஆகியவற்றில் நீண்டகால பங்காளித்துவத்தைக் கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையில் அரசதந்திர உறவுகள் தொடங்கி 60 ஆண்டுகளாகின்றன. இந்நிலையில், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பில் அதிக முக்கியத்துவம் பெறுவது, அனைத்துலகச் சவால்களுக்குத் தீர்வுகாண்பதில் கொண்டுள்ள பகிர்ந்த கடப்பாட்டை வெளிப்படுத்துகிறது,” என்று அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
கரியமிலவாயு வெளியீட்டைக் குறைப்பதில் ஆசியானால் தரமிக்க, அனைத்துலக நிலைக்கு இணங்கும் வகையிலான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை சிங்கப்பூர் - தாய்லாந்து இடையிலான உடன்பாடான ஒரு தெளிவான அறிகுறி என்று திரு சலெம்சாய் குறிப்பிட்டார்.