சிங்கப்பூரும் தாய்லாந்தும் கரிம ஊக்கப் புள்ளித் திட்டங்களுக்கான விண்ணப்பங்களை அறிவித்துள்ளதாக சிங்கப்பூர் வர்த்தக, தொழில் அமைச்சு செவ்வாய்க்கிழமை (மார்ச் 31) தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்படும் திட்டங்கள் பாரிஸ் உடன்பாட்டுக்கு ஏற்ப கரிம ஊக்கப் புள்ளிகளை உற்பத்தி செய்வதன் மூலம் கரிம வெளியேற்றத்தைக் குறைக்கும் வாய்ப்புகளைத் தாய்லாந்துக்கு வழங்குவதுடன் இருநாட்டுப் பருவநிலை இலக்குகளை எட்ட உதவும்.
சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட கரிம வரி செலுத்தவேண்டிய நிறுவனங்கள் சிங்கப்பூர் அனைத்துலகக் கரிம ஊக்கப் புள்ளி கட்டமைப்பின்கீழ் உள்ள வரிக் கழிவுகளில் 5 விழுக்காடு வரை கழிவு பெறலாம்.
கரிம ஊக்கப் புள்ளித் திட்டங்கள் நீடித்த நிலைத்தன்மை மேம்பாட்டை முன்னிறுத்துவதுடன் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, சுற்றுப்புற மாசைக் குறைப்பது போன்றவை மூலம் உள்ளூர்ச் சமூகங்களுக்குக் கைகொடுக்கும்.
கரிம ஊக்கப் புள்ளி ஒத்துழைப்பின்கீழ் உள்ள இருதரப்புச் செயல்பாட்டு ஒப்பந்தத்தின்மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சிங்கப்பூரும் தாய்லாந்தும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அந்த ஒப்பந்தத்தைச் செய்துகொண்டன.
ஆசியான் நாடுடன் அந்த ஒப்பந்தத்தைச் சிங்கப்பூர் செயல்படுத்துவது இது முதன்முறை.
இதற்குமுன் பூட்டான், கானா, பெரு, ருவாண்டா ஆகிய நாடுகளுடன் இணைந்து திட்டங்களுக்கான விண்ணப்பங்களைப் பெற சிங்கப்பூர் அழைப்புவிடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
தாய்லாந்தில் கரிம ஊக்கப் புள்ளித் திட்டங்களுக்கான ஒப்புதலைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை விருப்பமுள்ள தரப்புகள் சமர்பிக்கலாம்.
சிங்கப்பூரும் தாய்லாந்தும் இணைந்து சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை மறுஆய்வு செய்யும்.

