கிட்டத்தட்ட 45 ஆண்டுகளாக சிங்கப்பூரர்களுக்கு குவைத் வழங்கிவரும் சமயக் கல்விக்கான உபகாரச் சம்பளத்திற்கு சிங்கப்பூர் நன்றிகூறிக்கொள்வதாக பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
குவைத் நாட்டு அரசாங்க ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்ததற்காக சிங்கப்பூர் பெருமைகொள்வதாகவும் திரு வோங் கூறினார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் ஓர் அங்கமாக செவ்வாய்க்கிழமை (மே 27) நடைபெறவுள்ள 2வது ஆசியான் - வளைகுடா ஒத்துழைப்பு மன்ற (ஜிசிசி) உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜிசிசி உறுப்பு நாடுகளில் ஒன்றான குவைத் சார்பில் அதன் பட்டத்து இளவரசர் ஷேக் சாபா அல்-காலித் அல்-சாபா மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் வந்துள்ளார்.
அங்கு பிரதமர் வோங்கும் ஷேக் சாபாவும் இருதரப்புச் சந்திப்பை நடத்தினர்.
சிங்கப்பூருக்கும் குவைத்துக்கும் இடையில் அரசதந்திர உறவுகள் 40 ஆண்டுகளாக நீடித்து வருவதாகக் குறிப்பிட்ட திரு வோங், இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்பும் பொருளியல் ஒத்துழைப்பும் இன்னும் வலுவாகும் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

