சிங்கப்பூர் அடுத்த ஐந்தாண்டுகளில் ஆய்வு, புத்தாக்கம், நிறுவன (ஆர்ஐஇ) திட்டத்தின் கீழ், பயன்முறைச் செயற்கை நுண்ணறிவு (applied artificial intelligence) திட்டத்தைத் தொடங்கவுள்ளது.
பெரிய அளவிலான பல அம்சங்களை அடக்கிய மேலும் இரு திட்டங்களும் தொடங்கப்படும் என்று துணைப் பிரதமரும் தேசிய ஆய்வு அறநிறுவனத்தின் தலைவருமான ஹெங் ஸ்வீ கீயட் வியாழக்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்தார்.
அவ்விரண்டு திட்டங்களும் முக்கிய பொருளியல் துறைகளில் மதிப்பை உருவாக்குவதும், பெரும் சவால்களாகிய தேசிய உத்திபூர்வ முன்னுரிமைகளை எதிர்கொள்ளுதல் எனவும் வரவு செலவுத் திட்டம் தொடர்பான இரண்டாவது நாள் விவாதத்தில் துணைப் பிரதமர் ஹெங் கூறினார்.
“இந்த ஆண்டின் பிற்பகுதியில் 2026 முதல் 2030 வரையிலான காலத்துக்கான முதலீடுகள் இறுதி செய்யப்படும்” என்று அவர் கூறினார்.
முதலில், பயன்முறைச் செயற்கை நுண்ணறிவுத் திட்டம், சுகாதாரம், கல்வி, நிதி, மேம்பட்ட உற்பத்தி, இணைப்பு, தளவாடத்துறை, போக்குவரத்து போன்ற முக்கியத் துறைகளில் அதிகமான பயன்பாடுகளைக் கண்டறியும்.
இரண்டாவது, பெரும் திட்டங்கள், பெரும் சவால்கள். இவை, பல்கலைக்கழகங்கள், ஆய்வு நிலையங்கள், பொது அமைப்புகள், தனியார் துறை நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து ஆய்வு, மொழிபெயர்ப்பு ஆற்றல்களை ஒன்றிணைக்கும்.
முதல் பெரிய சவால் “ஆரோக்கியமான, வெற்றிகரமான நீண்ட ஆயுளில்” கவனம் செலுத்தும்.
முதல் பெருந்திட்டம், சிங்கப்பூரின் குறைக்கடத்தி, மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் ஆய்வு, மேம்பாட்டுத் துறையை மேம்படுத்தும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர் வரும் ஆண்டுகளில் அதன் அனைத்துலக பங்காளித்துவங்களையும் முடுக்கிவிடும். அடிப்படை ஆய்வு, ஆய்வுத் திறன்களை வளர்ப்பது, ஆய்வு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றில் தொடர்ந்து முதலீடு செய்யும்.
பட்ஜெட் 2025 அறிவிப்புகள் தவிர்த்து, சிங்கப்பூர் புதிய தரவு, கணினி திறன்களிலும் முதலீடு செய்யும், என்று துணைப் பிரதமர் ஹெங் கூறினார்.
உலகப் பொருளியல் மாற்றங்களை எதிர்கொள்ள சிங்கப்பூர் பொருளியல் உருமாற்றம், புத்தாக்கச் சூழல் ஆகியவற்றை வலுப்படுத்துவது, ஆய்வுத் துறையில் முதலீடு செய்வது ஆகிய மூன்று அம்சங்களில் கவனம் செலுத்துகிறது என்றார் அவர்.
சிங்கப்பூர் தனது புத்தாக்கம், நிறுவனக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும்.
புதிய எதிர்காலத்திற்கு, பரந்த உலகச் சந்தைக்குத் துணிந்து செல்ல நிறுவனங்கள் உந்துபலகையாக செயல்பட முடியும் என்று திரு ஹெங் கூறினார்.
சிங்கப்பூரர்களுக்கு ஆதரவளிப்பதன் மூலமும், அனைத்துலக முன்னணித் திறனாளர்களை ஈர்ப்பதன் மூலமும், திறனாளர்களை மேம்படுத்துதல் மற்றோர் அம்சம் என்றார் அவர்.

