சிங்கப்பூர்-சீனா மேம்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: வர்த்தகர்களுக்கு கூடுதல் சந்தை வாய்ப்பு

2 mins read
e71d43bf-df41-4ea3-80c7-85ce842186a4
சிங்கப்பூர் முதலீட்டாளர்கள், சேவை வழங்குநர்கள் ஆகியோர் கூடுதல் தாராளமய, வெளிப்படையான விதிமுறைகளின்கீழ் சீனாவில் முதலீடு செய்ய, வர்த்தகம் புரிய வாய்ப்புகள் கிடைக்கும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர், சீனாவுக்கு இடையே 15 ஆண்டுகால தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளது.

இந்த ஒப்பந்தம் தற்பொழுது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இரு நாட்டு முதலீட்டாளர்கள், சேவை வழங்குநர்களுக்கு கூடுதல் சந்தை வாய்ப்புகள் ஏற்பட்டிருப்பதுடன் தொலைபேசி சேவைகளும் விரிவடைந்திருப்பதாக வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த மேம்பட்ட சிங்கப்பூர்-சீனா தடையற்ற வர்த்தக ஒப்பந்த நடைமுறை செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31ஆம் தேதி) செயல்படத் தொடங்கியது. இதில், புதுப்பிக்கப்பட்ட, வெளிநாட்டவர் முதலீடு செய்வதற்கு அனுமதியில்லாத தொழில் துறைகளின் பட்டியலும் உள்ளது. இது முந்தைய பட்டியலில் இருந்த தொழில் துறைகளின் எண்ணிக்கையைவிடக் குறைவு என்று கூறப்படுகிறது. இதன் பயனாக சிங்கப்பூர் வர்த்தகங்கள் சீனாவில் அதிக அளவிலான சேவை வழங்கும் நிறுவனங்களுடன் வர்த்தக உறவுகள் வைத்துக்கொள்ளலாம் என்று அமைச்சு விளக்கியது.

மேலும், கட்டுமானம், அது தொடர்புடைய பொறியியல் துறைகள், சில்லறை, மொத்தவிற்பனை வர்த்தகம், கட்டடக்கலை மற்றும் நகர மேம்பாட்டுத் திட்டம், தொழில்நுட்ப ஆய்வு, வாடகைக் குத்தகை எடுப்பது போன்ற 20க்கும் மேற்பட்ட துறைகளில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்குகள் பெறுவதற்கு தடை ஏதும் இருக்காது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சீனாவில் முதலீடு செய்ய, வர்த்தகம் புரிய சிங்கப்பூர் முதலீட்டாளர்களும் சேவை வழங்குநர்களும் அதிக தாராளமய, வெளிப்படையான விதிமுறைகளின் பலன்களைப் பெறுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம் புதிய தடையற்ற வர்த்தக ஒப்பந்த விதிமுறைகள் ஒருவரின் பிறந்த நாட்டின் அடிப்படையில் மூத்த நிர்வாகம், இயக்குநர் பொறுப்புகள் வகிப்பதற்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதை தடை செய்கிறது.

சீனா தனது தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், அது தொடர்பான வெளிநாட்டவருக்கு அனுமதி மறுக்கப்படும் புதிய பட்டியல், ஆகியவற்றை பற்றிய பேச்சுவார்த்தையை இப்பொழுதுதான் முதல் முறையாக மேற்கொண்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்