சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு சந்திப்பு திங்கட்கிழமை (நவம்பர் 11) நடைபெற்றது.
அச்சந்திப்பில் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவைப் புதுப்பிக்கவும் வர்த்தக, நிதி போன்ற துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
இவ்வாண்டு மே மாதம் திரு லாரன்ஸ் வோங் சிங்கப்பூரின் பிரதமராகப் பதவியேற்றப் பிறகு இருதரப்பு ஒத்துழைப்புக்காக நடத்தப்படும் முதல் சந்திப்பு இது.
சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங்கும் சீனத் துணைப் பிரதமர் திங் சுவேசியாங்கும் இச்சந்திப்பை வழிநடத்தினர்.
வட்டார செழுமைக்கும் இரு நாட்டின் வளர்ச்சிக்குப் பயனளிக்கும் உயர்தரப் பலன்களைத் தரும் வளர்ந்துவரும் துறைகளில் தொடர்ந்து ஒத்துழைப்பை நல்கவும் வாய்ப்புகளைப் பயன்படுத்தவும் இருநாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டதாகப் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஒவ்வொரு புதிய தலைமுறை தலைவர்களுடன் உறவைப் புதுப்பிப்பதுடன் இருதரப்புக்கும் இடையே இருக்கும் புரிதலைத் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும். இதன் மூலம் ஒருவருக்கொருவர் நம்பிக்கையை உருவாக்க முடியும்,” என இருதரப்பு ஒத்துழைப்புக்கான கூட்டு மன்றத்தின் இணைத் தலைவரும் துணைப் பிரதமருமான கான் கிம் யோங் கூறினார்.
தலைமைத்துவ மாற்றம் இருந்தபோதிலும், உலகளாவிய அரசியல் சூழலுக்கும் வளர்ந்துவரும் துறைகளில் உள்ள வாய்ப்புகளுக்கும் ஏற்ப சிங்கப்பூரும் சீனாவும் தங்கள் அதிகாரத்துவ உறவைத் தொடர்ந்து மேம்படுத்தி வருகின்றன.
இவ்வாண்டு நடந்த இருதரப்புச் சந்திப்பில் சிங்கப்பூரும் சீனாவும் வர்த்தகம், நிதி, முதலீடு ஆகிய துறைகளில் உறவை வலுப்படுத்த 25 உடன்பாடுகளில் கையெழுத்திட்டன.
தொடர்புடைய செய்திகள்
குறிப்பாக, சீனாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேலும் மேம்படுத்துவதற்கான நெறிமுறைகளை இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவர இருநாடுகளும் ஒப்புக்கொண்டன.
சிங்கப்பூர் முதலீட்டாளர்களும் சேவை வழங்குநர்களும் சீனாவில் முதலீடு செய்து தங்கள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் நடைமுறையை இந்த ஒப்பந்தம் எளிதாக்குகிறது.