தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தீவு முழுவதும் கிறிஸ்துமஸ் குதூகலம்

3 mins read
18b3336a-5435-4b3f-b2d7-b83f5bd9dc6f
கரையோரப் பூந்தோட்டத்தில் உள்ள கிறிஸ்துமஸ் வாண்டர்லேண்ட்.  - படம்: சாவ்பாவ்

தயாமயி பாஸ்கரன்

கிறிஸ்துமஸ் தினத்திற்கு இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ளன. ஆனால், கிட்டத்தட்ட ஒரு மாதமாக கிறிஸ்துமஸ் உணர்வை மக்களிடையே பரப்பும் நோக்கில் பல்வேறு இடங்களில் கண்கொள்ளா அலங்காரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

கிறிஸ்துமஸ் வாண்டர்லேண்ட் 

கிறிஸ்துமசை முன்னிட்டு கரையோரப் பூந்தோட்டத்தில் மீண்டும் இடம்பெற்றுள்ள ‘கிறிஸ்துமஸ் வாண்டர்லேண்ட்’ அலங்காரத்தில், 20 மீட்டர் உயரமுள்ள ‘ஸ்பெல்லியரா’ எனும் பிரம்மாண்டமான கட்டுமானம், 4,000 விளக்குகள் கொண்ட நடைபாதை போன்றவை இடம்பெற்றுள்ளன.

அனைத்து வயதினரையும் ஈர்க்கும் இந்த அலங்காரத்தை, ஜனவரி 1ஆம் தேதி வரை நாள்தோறும் மாலை 6.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை கண்டு ரசிக்கலாம்.

ரால்ஃப் லாரன் கிறிஸ்துமஸ் மரம் 

பார்வையாளர்கள் ‘ஜுவல் சாங்கி’யிலுள்ள உட்புற நீர்வீழ்ச்சிக்கு அருகே அமைக்கப்பட்டிருக்கும் 16 மீட்டர் உயரமுள்ள ‘ரால்ஃப் லாரன் ஹாலிடே ட்ரீ’ எனும் கிறிஸ்துமஸ் அலங்கார மரத்தைக் கண்டு மகிழ்வதுடன், அங்குள்ள வாழ்த்து அட்டை அச்சிடும் இயந்திரத்தையும் டிசம்பர் 31ஆம் தேதி வரை பயன்படுத்தலாம்.

மேலும், பிப்ரவரி 16ஆம் தேதி வரை ‘போலோ’ கூடாரத்தில் பார்வையாளர்கள் தங்கள் போலோ ஆடைகள், தண்ணீர் போத்தல் போன்றவற்றைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப வடிவமைத்துக் கொள்ளலாம்.

‘வோர்ல்ட் கிறிஸ்துமஸ்’ சந்தை 

‘த ப்ரோமோண்டரி@மரினா பே’யில் ‘வோர்ல்ட் கிறிஸ்துமஸ்’ எனும் சந்தை அமைக்கப்பட்டுள்ளது. இச்சந்தையில் பிரம்மாண்ட ‘கேண்டி கேன்’ சிலை, பாடும் கிறிஸ்துமஸ் மரம், நேரடியாகப் படைக்கப்படும் கிறிஸ்துமஸ் பாடல் நிகழ்ச்சிகள், விடுமுறைக்கால விளக்கு அலங்காரங்களைக் கண்டு ரசிக்கலாம்.

செல்லப்பிராணிகளுக்கு இதில் அனுமதி உண்டு. இச்சந்தையில் கைவினைப் பொருள்களை வாங்குவதுடன் ‘மல்ட் ஒயின்’ (Mulled wine) , ‘பிராட்வர்ஸ்ட்’ போன்ற ஜெர்மன் தின்பண்டங்களை ருசிக்கலாம்.

சிறுவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியில், இரவு முழுவதும் நடைபெறும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளலாம். டிசம்பர் 5ஆம் தேதி தொடங்கிய இச்சந்தை 25ஆம் தேதி வரை நடைபெறும்.

கிறிஸ்துமஸ் ஒளியூட்டு 

ஆர்ச்சர்ட் சாலையில் கிறிஸ்துமஸ் ஒளியூட்டு நிகழ்ச்சியை முன்னிட்டு நீ ஆன் சிவிக் பிளாசாவில் 14 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரம், பெரிய கிறிஸ்துமஸ் கிராமம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

மற்றொரு பெரிய கிறிஸ்துமஸ் கிராமம், ‘ஷா ஹவுஸ் அர்பன் பிளாசா’வில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கிறிஸ்துமஸ் கிராமங்களில் பனிப்பொழிவு, சிறுவர்களுக்கான விளையாட்டுகள், சவாரிகள் போன்றவை உள்ளன.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முந்தைய தினமான டிசம்பர் 24ஆம் தேதி ஆர்ச்சர்ட் சாலை முழுவதும் இசை நிகழ்ச்சிகள், உணவு வண்டிகள், கடைகள் மட்டுமன்றி இரவு 8 மணி முதல் நடைபெறும் கிறிஸ்துமஸ் ‘கவுண்ட்டௌன்’ நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மிகைமெய்த் தொழில்நுட்பத்தில் உருவான கிறிஸ்துமஸ் கொண்டாட்டக் காட்சிகளையும் பார்வையாளர்கள் கண்டு ரசிக்கலாம்.

ஹலோ கிட்டி, சேன்ரியோ

சாங்கி கொண்டாட்டக் கிராமத்தில் பொருத்தப்பட்டுள்ள, ‘டோபியரி’ எனப்படும் புதர்ச் செடிகளை அழகான வடிவங்களில் கத்தரித்து வைக்கும் முறையைப் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ள 8 மீட்டர் உயரத்திலான ‘ஹலோ கிட்டி’ வடிவம் காண்போர் கண்களைக் கவர்கிறது.

சேன்ரியோ, குரோமி, பொம்புரின் போன்ற கேலிச்சித்திரக் கதாபாத்திரங்களுடன் குறிப்பிட்ட நேரங்களில் நிகழும் ‘மீட் அண்ட் கிரீட்’ நிகழ்ச்சிகளிலும் பார்வையாளர்கள் பங்கேற்கலாம்.

‘ஹலோ கிட்டி’, அதன் நண்பர்கள் கதாபாத்திரங்களைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள கார்னிவல் சவாரியும் உள்ளது. இங்கு ‘கெரோசல்’ சவாரி, பணம் செலுத்திப் பொம்மை வெல்லும் இயந்திரம், ‘ரிங் டாஸ்’ போன்ற விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன.

குறிப்புச் சொற்கள்