ஓராண்டு விசா திட்டத்தின்கீழ் தற்காலிகமாக அமெரிக்காவில் வேலை செய்யத் திட்டமிடும் சிங்கப்பூரர்கள், எச்-1பி விசாவுக்கான 100,000 டாலர் (129,000 வெள்ளி) கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை.
சிங்கப்பூரின் அமெரிக்கத் தூதரகம் திங்கட்கிழமை (செப்டம்பர் 29) இத்தகவலை ஃபேஸ்புக்கில் வெளியிட்டது. எச்-1பி1 விசா பெறும் நடைமுறைகளில் தற்போது மாற்றம் ஏதும் இல்லை என்று அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டது.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், இம்மாதம் 19ஆம் தேதி அறிவித்த விசா கட்டண மாற்றம் எச்-1பி விசாவுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று அமெரிக்கத் தூதரகம் தெளிவுபடுத்தியது.
எச்-1பி விசா, தற்காலிகமாக அமெரிக்காவில் வேலை செய்ய விரும்பும் திறனாளர்களுக்கானது. அந்த விசாவுக்குத் தகுதிபெற குறைந்தபட்சம் இளநிலைப் பட்டதாரியாக இருக்கவேண்டும்.
ஒவ்வொரு மூவாண்டுகளுக்கும் அந்த விசாவை நீட்டிக்க விண்ணப்பிக்கலாம்.
அதேவேளை, எச்-1பி1 விசா சிங்கப்பூரர்களுக்கும் சிலி நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டும் வழங்கப்படுவது. அதைப் பெற, அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடிபோகும் எண்ணம் இல்லை என்பதை விண்ணப்பதாரர்கள் நிரூபிக்கவேண்டும்.
அந்த விசாவைக் கொண்டு அமெரிக்க நிரந்தரவாசி ஆக முடியாது. எச்-1பி1 விசா, பொறியியல், மருந்து, உயிரியல் தொழில்நுட்பம் போன்ற சிறப்புத் துறைகளில் பணியாற்றும் நிபுணர்களுக்கானது.
ஆண்டுதோறும் அதிகபட்சம் 5,400 சிங்கப்பூரர்களுக்கும் 1,400 சிலி நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் எச்-1பி1 விசா வழங்கப்படுகிறது.

