2025ல் நிலையற்ற ஆண்டை எதிர்நோக்கும் சிங்கப்பூர் நிறுவனங்கள்

2 mins read
உருமாற்றத்தில் ஓராண்டு கவனம் செலுத்திய பிறகான நிலை
fc100c2d-3743-4594-b738-27dedb1d9341
கூடுதலான உள்ளூர் நிறுவனங்கள் வெளிநாடுகளில் வாய்ப்புகளைத் தேடும் வேளையில் முதலீட்டாளர்கள் சிங்கப்பூரைப் பாதுகாப்பான இடமாகக் கருதினால் ஆக்ககரமான சூழல் ஏற்படக்கூடும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரிலுள்ள நிறுவனங்கள், இந்த ஆண்டின் (2024) வர்த்தக உருமாற்ற நடவடிக்கைகளுக்குப் பிறகு, 2025ல் நிலையற்ற ஆண்டை எதிர்நோக்குவதாகக் கூறப்பட்டுள்ளது.

வர்த்தகச் செலவு அதிகரித்ததாலும் திறனாளர் பற்றாக்குறையாலும் நிறுவனங்கள் உடனடி வளர்ச்சித் திட்டங்களைத் தள்ளிப்போட்டு, தங்களை வலுப்படுத்திக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட நேரிட்டதால் இந்நிலை ஏற்பட்டதாகத் துறைசார்ந்தோர் கூறுகின்றனர்.

இந்த ஆண்டு ஒட்டுமொத்தப் பொருளியல் மேம்பட்டாலும் சில நிறுவனங்கள் கவனமாகச் செயல்பட முடிவெடுத்தன. உலகளாவிய நிச்சயமற்றதன்மையும் செலவின நெருக்கடியும் அதற்குக் காரணம் என்று என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் துணை நிர்வாக இயக்குநர் ஜோயேன் டான் கூறினார்.

இத்தகைய கவனமாகக் கண்காணிக்கும் நடைமுறையைக் கடைப்பிடித்தபோதும் அவை உலகத் தரநிலைகளுக்குப் பொருத்தமாக விளங்குவதற்காகச் செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்கமயமாதல், நீடித்த நிலைத்தன்மை போன்றவை சார்ந்த நடவடிக்கைகளில் முதலீடு செய்தன என்றார் அவர்.

சிங்கப்பூரில் 300,000க்கும் மேற்பட்ட சிறிய, நடுத்தர நிறுவனங்கள் இயங்குகின்றன. இங்குள்ள நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கையில் இவற்றின் விகிதம் 99 விழுக்காடு ஆகும்.

சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பின் கருத்தாய்வில், 2023ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, 2024ல் மேலும் ஏழு விழுக்காட்டு நிறுவனங்கள் மின்னிலக்கச் செயல்பாட்டு நடைமுறைகளை மேம்படுத்தியது தெரியவந்தது.

மிகச் சிறிய நிறுவனங்களும் மீள்திறன், புத்தாக்கம், உற்பத்தித் திறன் ஆகியவற்றை வலுப்படுத்த முயன்றதாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் சங்கம் தெரிவித்தது.

இருப்பினும் அவற்றின் செயலாக்கம் போதுமான அளவில் இல்லை அல்லது நடுநிலையாக இருந்தது என்று சங்கம் கூறியது.

இந்நிலையில், இந்த ஆண்டு சிங்கப்பூர்ப் பொருளியல் 3.5 விழுக்காடு வளர்ச்சி அடையுமென முன்னுரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தங்குமிடம், சில்லறை வர்த்தகம், உணவு-பானத் துறைகளுக்கான அதிகாரபூர்வ மதிப்பீடுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை.

அடுத்த ஆண்டும் இதே நிலை தொடரும் என்று பொருளியலாளர்கள் முன்னுரைத்துள்ளனர். பெரும்பாலான நிறுவனங்களின் செயலாக்கம் இந்த ஆண்டின் நிலையிலேயே தொடரும் அல்லது சற்று குறைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தகப் பூசல், புதிய வரிகள், மத்திய கிழக்கு நிலவரம் ஆகியவற்றால் நிலையற்றதன்மை அதிகரிக்கும் வேளையில் செலவுகள், ஊழியர்கள் கிடைப்பதில் நிலவும் சிக்கல் போன்றவை சுமையாக விளங்குகின்றன. இந்நிலையில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் வட்டார நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புதிய நிறுவனங்கள் ஆகிய தரப்புகளிலிருந்து போட்டியை எதிர்கொள்கின்றன.

வட்டாரப் பூசல்கள் மோசமடைந்தால் வர்த்தக நடுவம் என்ற சிங்கப்பூரின் நிலைக்கு ஆபத்து ஏற்படக்கூடும். அதனால் வெளிநாட்டு முதலீடுகள் தடைபடக்கூடும் என்கின்றனர் வல்லுநர்கள்.

குறிப்புச் சொற்கள்