சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக $57 மில்லியன் பரிமாற்றம்

2 mins read
ஆடவர் இருவர் மீது குற்றச்சாட்டு
ea09e5bc-6771-4c72-a4d7-6c1dd0242817
ஆடவர் இருவருக்கும் தொடர்புடைய நிறுவனம் சட்டவிரோதமாக 45 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையைப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நிறுவனத்திற்கு வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாக US$45 மில்லியன் (S$57.4 மில்லியன்) அனுப்பப்பட்டதாகக் கூறப்படுவதன் தொடர்பில் ஆடவர் இருவர் மீது வியாழக்கிழமை (ஜூன் 26) குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மலேசியரும் ‘துப்ட்’ நிறுவனத்தின் இயக்குநருமான 65 வயது பேட்ரிக் லீ பெய்க் செங் மீதும் அந்த நிறுவனத்தில் உயர் பொறுப்பு வகித்த 28 வயது வியட்னாமியர் டின் டியென் டட் மீதும் தலா ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அவர்கள் இருவரும் சட்டவிரோதக் கட்டணச் சேவை வழங்கிய வர்த்தகத்தை நடத்தியதாகக் கூறப்பட்டது.

‘துப்ட்’ நிறுவனம் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது கட்டணம் அல்லது தரகுப் பணம் பெற்றுக்கொண்டு மொத்த விற்பனையில் ஈடுபடும் நிறுவனம் என்று ஆவணங்கள் காட்டுகின்றன.

2020ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் தேதிக்கும் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் தேதிக்கும் இடையே அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் வெளிநாடுகளிலிருந்து US$44,951,709.70 தொகை செலுத்தப்பட்டது.

‘ஆர்எச்பி’ வங்கிக் கணக்கில் 26 பரிவர்த்தனைகள் மூலமும் ‘ஸ்டாண்டர்ட் சார்டர்ட்’ வங்கிக் கணக்கில் 32 பரிவர்த்தனைகள் மூலம் அந்தத் தொகை செலுத்தப்பட்டது.

காவல்துறையின் வர்த்தக விவகாரப் பிரிவு மேற்கொண்ட விசாரணையில் அந்த நிறுவனத்திற்கும் அந்த இருவருக்கும் சிங்கப்பூரில் கட்டணச் சேவை வழங்குவதற்கான உரிமம் எதுவும் இல்லை என்று உறுதிசெய்யப்பட்டது.

வியாழக்கிழமை நடந்த விசாரணையின்போது, டின் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள விரும்புவதாக நீதிமன்றத்தில் கூறினார். ஆனால் லீ அவ்வாறு கூறவில்லை.

ஆகஸ்டு 7ஆம் தேதி டின் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லீ மீதான வழக்கு விசாரணை ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆடவர் இருவருக்கும் தலா $125,000 வரையிலான அபராதமோ மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.

உரிமமின்றி எல்லை தாண்டிய பணப் பரிமாற்றச் சேவை வழங்கும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கப் போவதில்லை என்று காவல்துறை குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்