தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் வளர்ச்சியில் சிங்கப்பூர் மிகுந்த நம்பிக்கை

3 mins read
‘இருநாட்டு உறவுகள் வெறும் வார்த்தைகளால் மட்டும் அமைந்ததல்ல. திடமான செயலாற்றலையும் உறுதியான விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது’ என்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்
c2cebf22-64e7-4d46-b71b-a4b46ea48896
புதுடெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு நேர்காணல் அளித்தார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

இந்தியாவின் வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகளில் சிங்கப்பூர் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளது என்றும் அதற்கு அந்நாட்டின் இளைய தலைமுறை, வளர்ந்துவரும் நடுத்தரக் குடும்பங்கள், துடிப்புமிக்க தொழில்நுட்பத் துறை, முக்கியமாக, சீர்திருத்தங்களுக்குக் கடப்பாடு கொண்டுள்ள அரசாங்கம் முதலியவையே முக்கியக் காரணிகள் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

இந்தியாமீது சிங்கப்பூர் கொண்டுள்ள நம்பிக்கை புதியதோ, அண்மையில் உதித்ததோ அன்று என்றும் நீடித்த, வெற்றியைத் தழுவிய செயல்களைப் பின்புலமாகக் கொண்டது என்றும் திரு வோங் குறிப்பிட்டார்.

இந்தியாவிற்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு புதுடெல்லி சென்ற பிரதமர், இந்தியாவின் முன்னணிச் செய்தி ஊடகங்களில் ஒன்றான இந்துஸ்தான் டைம்சுக்கு அளித்த சிறப்பு நேர்காணலில் இதனைத் தெரிவித்தார்.

இருதரப்பு உறவுகள், இந்தியப் பயணத்தின் நோக்கங்கள், இந்தியாவின் வளர்ச்சியில் சிங்கப்பூரின் பங்கு, இந்தியாவில் சிங்கப்பூரின் தொடர்ச்சியான முதலீடுகள், புதிய துறைகளில் இணக்கம், இருநாடுகளுக்கு இடையிலான மின்னிலக்க இணக்கங்கள், ஆசியான் அமைப்பில் இந்தியாவின் பங்கு, அனைத்துலக புவிசார் அரசியல் சூழலில் இந்தியா-சிங்கப்பூர் உறவு போன்ற பலதரப்பட்ட அம்சங்கள் குறித்து பிரதமர் வோங்கிடம் கேட்கப்பட்டது.

சிங்கப்பூர்-இந்தியா இடையில் 2005ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட ‘சீக்கா’ (CECA) எனப்படும் விரிவான பொருளியல் ஒத்துழைப்பு நல்ல அடித்தளம் அமைத்துள்ளதாகவும் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இருதரப்பு உறவுகளுக்குப் புத்துயிரூட்டவும் உறவுகளை மேம்படுத்தவும் வழிகள் ஆராயப்பட்டன என்றும் பிரதமர் விளக்கினார்.

அப்படி உருவானதே இருநாடுகளுக்கும் இடையிலான அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பு. தனித்தனி அமைச்சுகள் மத்தியில் இருநாடுகளும் ஒத்துழைப்பு குறித்து கலந்தாலோசிக்கும் முறையைக் கடந்து உத்திமுறைக் கண்ணோட்டத்தில் பல்வேறு துறைகளிலும் ஒத்துழைக்க இந்த அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பு வழிவகுக்கிறது.

மூன்றாவது சந்திப்பை நடத்திய அமைச்சர்கள், பல நல்ல திட்டங்களைப் பரிந்துரைத்துள்ளதாகவும் ஒத்துழைப்புகளை முன்னோக்கிக் கொண்டுசெல்ல முனைந்துள்ளதாகவும் திரு வோங் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டபோது இருநாடுகளுக்கும் இடையிலான நட்புறவு விரிவான உத்திபூர்வப் பங்காளித்துவமாக புதிய பரிணாமத்தை எட்டியது.

ஓராண்டுக்காலத்திலேயே ஒத்துழைப்பு மேலும் அணுக்கமாகி வந்துள்ளதை வலியுறுத்திப் பேசிய திரு வோங், இருநாட்டு உறவுகள் வெறும் வார்த்தைகளால் மட்டும் அமைந்ததல்ல என்றும் திடமான செயலாற்றலையும் உறுதியான விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டது என்றும் வருணித்தார்.

இந்தியாவின் ஆகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டாளராக, நேரடி வெளிநாட்டு முதலீட்டில் கிட்டத்தட்ட 24 விழுக்காட்டைக் கொண்டுள்ளது சிங்கப்பூர். கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த நிலையைத் தக்கவைத்துவரும் சிங்கப்பூர், இந்தியாவின் முதலீடுகளையும் கடந்த 20 ஆண்டுகளாக வெகுவாக ஈர்த்துவருகிறது. 2004ஆம் ஆண்டில் $481 மில்லியனாக இருந்த முதலீடு, 2023ஆம் ஆண்டில் $31.6 பில்லியனாக உயர்ந்தது.

புதுடெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு பிரதமர் லாரன்ஸ் வோங் வழங்கிய சிறப்பு நேர்காணல். அந்நிறுவனத்தின் வெளிவிவகாரப் பிரிவின் ஆசிரியர் ரிஸாவுல் ஹசன் லஸ்கர் பிரதமரை நேர்கண்டார்.
புதுடெல்லியில் இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்திற்கு பிரதமர் லாரன்ஸ் வோங் வழங்கிய சிறப்பு நேர்காணல். அந்நிறுவனத்தின் வெளிவிவகாரப் பிரிவின் ஆசிரியர் ரிஸாவுல் ஹசன் லஸ்கர் பிரதமரை நேர்கண்டார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

பகுதி மின்கடத்தித் துறையின் மையமாக இந்தியா உருமாற சிங்கப்பூர் முனைப்புடன் செயல்பட்டுவருவதன் நோக்கம் என்ன என்று கேட்கப்பட்டது. இன்றைய பொருளியலில் மிக முக்கிய இடத்தை வகிக்கும் பகுதி மின்கடத்தித் துறையில் இணக்கம் காணும் மூன்று வழிகளையும் அதற்கான மூன்று காரணங்களையும் பிரதமர் விளக்கினார்.

பகுதி மின்கடத்திகளை உற்பத்தி செய்ய தேவைப்படும் பொருள்களையும் விநியோகிப்பாளர்களையும் தடையற்ற தடத்தில் அணுக்கமாகக் கொண்டு வருவது, அத்துறைக்கு வேண்டிய திறன்மிக்க தொழில்நுட்ப வல்லுநர்களையும் ஊழியர்களையும் உருவாக்க பயிற்சியில் கவனம் செலுத்துவது, இந்தியாவிற்கு ஆய்வு, உருவாக்கத் துறையில் இருக்கும் ஆற்றலைக் கொண்டு இத்துறையில் அதன் பலன்களைப் பெறுவது ஆகிய மூன்று அம்சங்களில் இணைந்து செயல்படுவதை அவர் சுட்டினார். பகுதி மின்கடத்தித் துறைக்கான கூட்டுத் திறன்பயிற்சி மையத்தை குஜராத்தில் அமைக்கும் சாத்தியம் ஆராயப்படுவதாகவும் அவர் சொன்னார்.

பொருளியலை முன்னெடுத்துச் செல்வதில் கணினிச்சில்லுகள் முதன்மையான பங்காற்றி வருவதால் அவற்றைத் தயாரிக்கத் தேவையான பகுதி மின்கடத்திகள் உத்திபூர்வ முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. ஆகவே, அதன் விநியோகச் சங்கிலி பரந்துபட்ட வகையிலும் மீள்திறன் மிக்கதாகவும் இருக்கவேண்டும். அதன் அடிப்படையில் இந்தியா அத்துறையில் வளர்ச்சி அடைவது விநியோகச் சங்கிலிக்கு மேலும் வலுசேர்க்கும் என்பது சிங்கப்பூரின் எண்ணம்.

இந்தியா வழங்கும் வாய்ப்புகளைக் கைக்கொள்ள பல சிங்கப்பூர் நிறுவனங்கள் ஆர்வமாக இருக்கின்றன என்றும் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்து வருகின்றன என்றும் திரு வோங் கூறினார்.

மேலும், வலுவான, எழுச்சிமிகு இந்தியா ஆசியாவின் நிலைத்தன்மைக்கும் மீட்சித்திறனுக்கும் பகிர்ந்த செழிப்புக்கும் பங்காற்றும் என்றும் அதனால் இந்தியாவுக்கு மட்டுமல்லாது அதன் சுற்றுவட்டாரப் பங்காளிகளுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் பிரதமர் வோங் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்