தங்கக்கட்டிச் சேமிப்புக் கிடங்குகளை அமைப்பது குறித்து சிங்கப்பூர் பரிசீலனை

தங்க வர்த்தக நடுவமாக நிலைநிறுத்த முயற்சி

தங்கக்கட்டிச் சேமிப்புக் கிடங்குகளை அமைப்பது குறித்து சிங்கப்பூர் பரிசீலனை

2 mins read
811afb56-566a-4b6e-8cf8-60887faf487c
உலகத் தங்க மன்றத்தின் தரவுப்படி, உலகெங்கிலும் உள்ள நாணய ஆணையங்கள் ஏறத்தாழ 39,000 டன் தங்கக்கட்டிகளை வைத்துள்ளன. அது இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட மொத்தத் தங்கத்தில் கிட்டத்தட்ட 18 விழுக்காடாகும். - படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூரைத் தங்க வர்த்தக நடுவமாக நிலைநிறுத்த மேற்கொள்ளப்படும் முயற்சியின் ஒரு பகுதியாக, மற்ற நாடுகளின் மத்திய வங்கிகளின் தங்க இருப்புகளை வைப்பதற்கான கூடுதல் சேமிப்புக் கிடங்குகளை அமைப்பது குறித்து சிங்கப்பூர் பரிசீலித்து வருகிறது.

இது குறித்த ஆலோசனைகள் ரகசியமானவை என்பதால் பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்களின் தகவல்படி, சாங்கி விமான நிலையத்துக்கு அருகிலுள்ள ஒரு நிலப்பகுதி உள்ளிட்ட உத்தேச இடங்களைச் சிங்கப்பூர் மதிப்பீடு செய்து வருகிறது.

இது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர், “தங்கத்தைப் பாதுகாப்பாகச் சேமிக்க எங்களது தற்போதைய வசதிகளைப் பயன்படுத்துவது குறித்து மத்திய வங்கி பரிசீலித்து வருகிறது,” என்று கூறினார்.

இருப்பினும், தனது சேமிப்புக் கிடங்கை அது விரிவாக்கம் செய்யுமா என்பது குறித்து ஆணையம் கருத்து தெரிவிக்கவில்லை.

தங்கக்கட்டிகள் சேமிக்கப்படும் கிடங்குகள் பெரும்பாலும் விமான நிலையங்களுக்குப் பாதுகாப்பான, துரிதமாகச் சென்றடையக்கூடிய பாதைகளில் அமைந்திருக்கும். இதன் மூலம் தங்கக் கட்டிகளைச் சாலையில் கொண்டு செல்லும் நேரம் குறைவதோடு, எளிதாக விமானம் மூலம் நாட்டிற்குள் கொண்டு வரவோ வெளியே அனுப்பவோ முடியும்.

உலகத் தங்க மன்றத்தின் தரவுப்படி, உலகெங்கிலும் உள்ள நாணய ஆணையங்கள் ஏறத்தாழ 39,000 டன் தங்கக்கட்டிகளை வைத்துள்ளன. அது இதுவரை வெட்டியெடுக்கப்பட்ட மொத்த தங்கத்தில் கிட்டத்தட்ட 18 விழுக்காடாகும். தங்கச் சந்தையில் ஒரு சிறிய பங்கைப் பெற்றால்கூட, அது சிங்கப்பூரின் வட்டார வர்த்தகச் செல்வாக்கை வலுப்படுத்தும். தற்போது சந்தையில், உலகின் மிகப் பெரிய பயனீட்டாளர் நாடான சீனாவுக்குத் தங்கம் செல்வதற்கான நுழைவாயிலாக இருக்கும் ஹாங்காங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்