நேப்பாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிங்கப்பூர் $130,800 (100,000 அமெரிக்க டாலர்) வழங்கவிருக்கிறது.
பொது நிதி திரட்டு முயற்சியின் ஒரு பகுதியாக, சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கத்திடம் அந்த நிதி கொடுக்கப்படும்.
அந்த நன்கொடை மனிதாபிமான நிவாரண முயற்சிகளுக்கும் நேப்பாளத்தில் பாதிக்கப்பட்டோரின் உடனடித் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.
நேப்பாள செஞ்சிலுவை சங்கத்தின் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ முதற்கட்டமாக $50,000 வழங்கப்போவதாக சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் அக்டோபர் 10ஆம் தேதி கூறியது.
“நிலைமை மோசமானால், நேப்பாளத்துக்குச் செல்ல தனது தொண்டூழியர்கள் தயார்நிலையில் உள்ளனர்,” என்று சிங்கப்பூர் செஞ்சிலுவை சங்கம் கூறியது.
சங்கத்தின் நிதி திரட்டு முயற்சிகளுக்குப் பங்களிக்க விரும்புவோர் அதன் இணையத்தளத்தில் அல்லது ‘Giving.sg’ இணையத்தளத்தில் நன்கொடை அளிக்கலாம்.
இந்நிலையில், நேப்பாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 200க்கும் மேற்பட்டோர் மாண்டுவிட்டனர். இருபது ஆண்டுகளில் இல்லாத அளவு பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள அக்கம்பக்கப் பகுதிகள் மூழ்கிவிட்டன.

