சிங்கப்பூருக்கு அடுத்த ஆண்டு (2025) கூடுதலான மூலதன வரவு கிட்டக்கூடும் என்றும் பங்குச் சந்தை அடுத்த ஆண்டும் மிகச் சிறப்பாகச் செயல்படும் என்றும் கருதப்படுகிறது.
அமெரிக்காவில் திரு டோனல்ட் டிரம்ப் அதிபராகப் பதவியேற்று, புதிய கொள்கைகளை வகுப்பது தொடர்பான நிச்சயமற்றதன்மை நிலவும் வேளையில் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையோடு பாதுகாப்பான இடத்தை விரும்புவது இதற்குக் காரணம்.
சிங்கப்பூர்ப் பங்குச் சந்தைக்குப் புதுமெருகூட்டும் நடவடிக்கைகளால் பங்குகளை எளிதாக வாங்கி விற்கும் செயல்திறன் மேம்படக்கூடும் என்றும் பங்கு மதிப்பு 20 விழுக்காடு வரை உயரக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை இந்த ஆண்டில் இதுவரை ஆசிய-பசிபிக் வட்டாரத்தின் பெரும்பாலான சந்தைகள், உலக அளவில் பெரும்பாலான முக்கியச் சந்தைகளைக் காட்டிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மொத்த லாபத்தின் அளவு கிட்டத்தட்ட 30 விழுக்காடாக மதிப்பிடப்பட்டுள்ளது.
வட்டாரச் சந்தைகள் சவால்களைச் சந்தித்தபோதும் அடுத்த ஆண்டும் சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை லாபகரமாகவே செயல்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அமெரிக்காவில் புதிய அதிபர் வகுக்கும் கொள்கைளின் தாக்கம் சிங்கப்பூர் உட்பட உலக நாடுகளின் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் குறிப்பிட்ட அவர்கள், முதலீட்டாளர்கள் கவனமாகச் செயல்படும்போது கூடுமானவரை சிக்கல்கள் குறைவான தெரிவுகளையே மேற்கொள்வர். நிலையான முதலீட்டுச் சந்தைகளையே அவர்கள் தேர்ந்தெடுப்பர் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
சிங்கப்பூரின் பாதுகாப்பான சந்தைச் சூழலையும் சிறந்த லாபப் பங்குகளையும் அவர்கள் சுட்டினர்.
உள்ளூர் வங்கிகளான டிபிஎஸ், யுஓபி, ஓசிபிசி மூன்றுமே இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் நல்ல லாப வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளன. அவை 5 முதல் 6 விழுக்காடு லாப ஈவுத் தொகையை முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர்ச் சந்தையின் தரநிலைக் குறியீடான ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறியீடு (STI) அடுத்த ஆண்டு 4,000ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அது 3,751ஆக உள்ளது.
திரு டிரம்ப்பின் தலைமையின்கீழ் அமெரிக்கா புதிய வரிகளை விதித்தால், ஆசியான்-5 எனப்படும் இந்தோனீசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து ஆகியவற்றின் வளர்ச்சி 0.3 முதல் 0.8 விழுக்காட்டுப் புள்ளிகள் வரை குறையக்கூடும் என்று கோல்ட்மன் சாக்ஸ் கூறுகிறது.

