தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் புழக்க அதிகரிப்பின் எதிரொலி

மின்சிகரெட்களுக்கு எதிராகக் கடுமையாகும் நடவடிக்கைகள்; சமரசத்திற்கு இடமேயில்லை: கா.சண்முகம்

2 mins read
0bfdbf89-9b24-4f1d-8a92-e6217a451da5
புதன்கிழமை (ஜூலை 30 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு மற்றும் உள்துறை அமைச்சர் கா. சண்முகம், உள்துறை, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சிம் ஆன். - படம்: இளவரசி ஸ்டீஃபன்

போதைப்பொருள் ஒழிப்பிற்கு எதிரான நடவடிக்கைகளில் சமரசம் இல்லை என்றும் அத்தகைய சம்பவங்களைக் கட்டுப்படுத்த சட்டங்கள் கடுமையாக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் கா. சண்முகம் கூறியுள்ளார்.

எடோமிடேட் மற்றும் பிற கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் சார்ந்த மின்சிகரெட் புழக்கம்  குறித்து புதன்கிழமை (ஜூலை 30) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சண்முகம் போதைப்பொருள் பயன்படுத்துவோரில் பலர் இளையர்கள் என்று குறிப்பிட்டார்.

“அவர்களுக்கென்று பிரகாசமான எதிர்காலம் உள்ளது, ஆனால் அவர்கள் இத்தகைய பொருள்களைப் புழங்குவதால், தங்கள் எதிர்காலத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் அபாயத்தைச் சந்திக்க நேர்கிறது,” என்று தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான சண்முகம் கூறினார்.

இந்த விவகாரம் குறித்தும், இந்த நிலைமைக்கு எதிராக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் சுகாதார அமைச்சு ஆய்வு செய்து வருவதாகக் கூறிய அமைச்சர் சண்முகம், இந்த நடவடிக்கைகளுக்குத் தகுந்த ஆதரவளித்து உதவுமாறு உள்துறை அமைச்சை தாம் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் சொன்னார்.

மேலும், இதன்தொடர்பில் இடைப்பட்ட காலத்தில் போதைப்பொருள் ஒழிப்புச் சட்டத்தின் கீழ், எடோமிடேட்டை ‘சி‘ பிரிவின்கீழ் உள்ள பட்டியலில் சுகாதார அமைச்சு இணைக்கவுள்ளதாகவும் தெரிவித்தார் திரு சண்முகம்.

இது போதைப்பொருளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளைச் செயல்படுத்த உதவும்.

நாட்டில் எடோமிடேட் உள்ளிட்ட பிற கட்டுப்படுத்தப்பட்ட பொருள்கள் மின்சிகரெட்டுகளில் பயன்படுத்தப்படுவது அண்மையில் வெளிச்சத்திற்கு வந்தது.

போதைப்பொருள் புழங்கிகள் இனி கட்டாய மேற்பார்வை, மறுவாழ்வு சார்ந்த நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும். அதே நேரத்தில் எடோமிடேட் கலந்த மின்சிகரெட்களை இறக்குமதி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் அல்லது விநியோகிப்பவர்கள் கடுமையான தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் எச்சரித்தார் அமைச்சர்.

போதைப்பொருளுக்கு எதிரான உறுதியான நிலைப்பாடு நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது என்றும் சிங்கப்பூரர்களின் நல்வாழ்வை அரசாங்கம் தொடர்ந்து முன்னிலைப்படுத்தும் என்றார் அவர். 

அரசாங்கத்தின் கொள்கைகளை சிங்கப்பூரர்கள் ஆதரிக்கும் வரை, போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை விதிப்பது உட்பட, போதைப்பொருள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு தொடர்ந்து மேற்கொள்ளும் என்று கூறினார் திரு சண்முகம்.

கடுமையான கட்டுப்பாடு அதிக உயிர்களைக் காப்பாற்றும் என்றும் சிங்கப்பூர் வீதிகளை போதைப்பொருள்களிலிருந்து விடுவிக்கும் எனவும் குறிப்பிட்ட அமைச்சர், அது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை மன அமைதியுடன் வளர்க்கவும் வழி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்