பாதுகாப்பு, செழிப்பு, வர்த்தகங்களை எளிதாக்குவதற்கான கடப்பாட்டினை மறுவுறுதிப்படுத்தும் இலக்குடன் சிங்கப்பூர் சுங்கத்துறை 2025 ஆம் ஆண்டுக்கான அனைத்துலக சுங்கத் தினத்தைக் கொண்டாடியது.
இதனையொட்டி, ஜனவரி 24 (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற விழாவில், சிங்கப்பூர் சுங்கத்துறையின் தலைமை இயக்குநர் டான் ஹங் ஹுய் சிறப்பாகச் செயலாற்றிய அதிகாரிகளுக்கு தகுதிசார் விருதுகளையும் பதக்கங்களையும் வழங்கிப் பாராட்டினார் .
அனைத்துலக சுங்க அமைப்பு (WCO) வகுத்திருக்கும் செயல்திறன், பாதுகாப்பு, செழிப்பு சார்ந்த இந்த ஆண்டிற்கான கருப்பொருள் சுங்கத்துறையின் புதுப்பிக்கப்பட்ட குறிக்கோள், நோக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்ட திரு டான், சிங்கப்பூரின் 60ஆவது சுதந்திர தினம் இவ்வாண்டு கொண்டாடப்படும் வேளையில், நாட்டைக் கட்டியெழுப்புவதில் துறை ஆற்றிய முக்கியப் பங்கையும் சுட்டினார்.
“சவால்களை எதிர்கொண்டு முன்னேறிச் செல்வதற்கு ஏதுவாக புத்தாக்கத்துடன் ஒருங்கிணைந்த செயல்பாட்டை கைக்கொண்டுவருகிறோம். தொடக்கத்திலிருந்தே நாட்டின் பொருளியல் நிலைத்தன்மையை ஆதரித்ததோடு மட்டுமல்லாது, நம்பகமான உலகளாவிய வர்த்தக மையமாகத் தேசத்தின் நிலையைச் சுங்கத் துறை உறுதிப்படுத்தியுள்ளது,” என்றார் திரு டான்.
இந்நிகழ்ச்சியில் சுங்கத்துறையின் புதிய சின்னம் வெளியிடப்பட்டது. மேலும், 11 அதிகாரிகளுக்கு WCO தகுதிசார் சான்றிதழ்கள் உட்பட 15 வெவ்வேறு விருது பிரிவுகளில் சிறப்பாகப் பணியாற்றிய இருநூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.
திறம்படப் பணியாற்றி நற்சேவை புரிந்ததற்காக தகுதிசார் விருது பெற்றவர்களுள் ஒருவர் திரு தனபாலன் ஈயமலை, 43. அரசாங்கச் சேவையில் 17 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் இவர், தமது அர்ப்பணிப்புமிக்க சேவைக்காக அங்கீகரிக்கப்பட்டார்.
நிலச் சோதனைச்சாவடி மற்றும் செயலாக்கப் பிரிவுக் குழுத் தலைவர் திரு தனபாலன், இவ்விருது வெற்றிக்கான வலுவான நினைவூட்டல் என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
“விடாமுயற்சியுடன் சக சிங்கப்பூரர்களுக்கு உன்னத சேவையாற்றி சமூகத்தில் மேம்பட்ட மாற்றத்தை உண்டாக்கும் நோக்கத்துடன் பணிபுரிந்து வருகிறேன்.
தொடர்புடைய செய்திகள்
“சீரிய தொலைத்தொடர்புத்திறன், இளைய அதிகாரிகளுக்கு வழிகாட்டுவது, கற்றல் அனுபவங்களை சக அதிகாரிகளுடன் பகிர்ந்துகொண்டு குழுவாகத் திறம்படச் செயலாற்றுவது போன்றவை நான் தவறாமல் கைக்கொள்ளும் பணியிட விழுமியங்கள்,” என்று தமிழ் முரசிடம் சொன்னார் திரு தனபாலன். கொண்டுசெல்லும் அல்லது எடுத்துவரும் பொருள்களின் முழு விவரத்தைக் கூறாமல் மறைப்பது, உரிய கட்டணங்களை செலுத்தாமல் ஏய்ப்பது, அபராதம் கட்டத் தவறுவது, பொருட்சேவை வரியினை தவறாகப் பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு செயல்களில் ஈடுபடுவோரை இவர் தம் பணியின்போது எதிர்கொள்கிறார்.
“சிலர் உடனடியாக முழுமையான தகவல்களைக் கூறமாட்டார்கள். எனினும், துறையின் அமலாக்க நடவடிக்கையை நடைமுறைப்படுத்தும் அதேவேளையில் அவர்களிடம் உரையாடும்போது பாங்குடனும் சேவைக்கான பண்புகளுடனும் திகழ்வதை எப்போதும் உறுதிசெய்துகொள்வேன்,” என்று திரு தனபாலன் கூறினார்.

