தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஆசிய அளவில் செயல்திறன்மிக்கதாக சிங்கப்பூர் நாணயம் தொடரக்கூடும்

2 mins read
eed7fc2c-b774-4c62-aea5-8e0c2023bb67
சிங்கப்பூர் நாணயம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆசியாவின் ஆகச் சிறந்த செயல்திறன்மிக்க நாணயமாக வாகை சூடக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். - கோப்புப் படம்: பிசினஸ் டைம்ஸ்

சிங்கப்பூர் நாணயம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆசியாவின் ஆகச் சிறந்த செயல்திறன்மிக்க நாணயமாக வாகை சூடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பணவீக்கத்தைச் சமாளிக்கும் பொருட்டு சிங்கப்பூர் நாணய ஆணையம் அந்நியச் செலாவணி விகிதத்தை நிலையாக வைத்திருக்கத் திட்டமிடுவதை அவர்கள் சுட்டினர்.

தற்போது இந்த வட்டாரத்தில் மூன்றாவது நிலையில் உள்ளது சிங்கப்பூர் நாணயம். ஹாங்காங் டாலரும் இந்திய ரூபாயும் முறையே முதல், இரண்டாவது நிலைகளில் உள்ளன.

இருப்பினும், ஜூலை 26ஆம் தேதி ஆணையம் அதன் அந்நியச் செலாவணி விகிதக் கொள்கையை மறுஆய்வு செய்யும்போது அந்த விகிதத்தில் மாற்றம் செய்யாது என்று கருதப்படும் நிலையில் சிங்கப்பூர் நாணய மதிப்பு வலுவாக மீண்டுவருகிறது.

இந்த ஆண்டின் பிற்பாதியிலும் சிங்கப்பூர் நாணயம் தொடர்ந்து சிறப்பான செயல்திறனுடன் விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சிங்கப்பூரின் மூலாதாரப் பணவீக்கம் ஜூன் மாதத்தில் மெதுவடைந்து மூன்று விழுக்காடாகப் பதிவானதாக புளூம்பெர்க் கருத்தாய்வில் பொருளியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆணையம் அதன் அந்நியச் செலாவணி விகிதக் கொள்கையில் மாற்றம் செய்யாமலிருப்பதற்கு சிங்கப்பூரின் வலுவான வளர்ச்சி வாய்ப்புகளும் காரணமாகக் கருதப்படுகின்றன.

மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இந்த ஆண்டின் (2024) இரண்டாம் காலாண்டில் எதிர்பார்க்கப்பட்டதைவிட வேகமாக வளர்ச்சி கண்டது.

புவிசார் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய நிலையில் வட்டி விகித அதிகரிப்பு போன்ற சவால்கள் தொடர்ந்தாலும், சிங்கப்பூரின் பொருளியல் இந்த ஆண்டு முன்னுரைக்கப்பட்ட 1 முதல் 3 விழுக்காட்டு வளர்ச்சியில் கிட்டத்தட்ட 3 விழுக்காடாக இருக்கும் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது.

அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஹாங்காங் டாலர் ஆசியாவின் ஆகச் சிறந்த செயல்திறன் மிக்க நாணயமாக இப்போது விளங்கினாலும், அடுத்த சில மாதங்களில் அமெரிக்க மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை மாற்றும்போது அது மிகவும் வலுவிழப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க டாலருடன் ஒப்பிடுகையில் இந்திய ரூபாயும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலுவிழப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

குறிப்புச் சொற்கள்