சிங்கப்பூர் பொருளியல் 2024ஆம் ஆண்டு எதிர்பார்ப்புகளை மிஞ்சி 4% வளர்ச்சி கண்டுள்ளது. அத்துடன், சிங்கப்பூரர்களின் சராசரி வருமானம், பணவீக்கத்தையும் தாண்டி, பத்தாண்டு காலத்தில் ஆண்டுக்கு 2.2 விழுக்காடு அதிகரித்துள்ளது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
பல வளர்ச்சியடைந்த நாடுகள் போலல்லாது சிங்கப்பூரில் வேலையிழப்பு, வருமானம் உயராமல் ஒரே நிலையில் இருப்பது போன்ற பிரச்சினைகள் இல்லை.
பெரும்பாலான ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வைத் தாண்டிய வருவாய் உயர்வை தந்துள்ளது. அதனால், அவர்கள் உண்மையிலேயே முன்னைவிட நல்ல நிலையில் இருக்கின்றனர் என்றார் பிரதமர்.
நெருக்கடி நிலைகளைத் தாண்டி வருவது, ஒருவருக்கு ஒருவர் தேவையான நேரத்தில் ஆதரவளிப்பது, உலக அரங்கில் உன்னத நிலையை எட்டும் முயற்சி என எல்லாவற்றிலும் சிங்கப்பூரர்கள் ஒட்டுமொத்தமாக ஒரு குழுவாக இணைந்து செயல்படுவது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31ஆம் தேதி) பிரதமர் தமது முதல் புத்தாண்டுச் செய்தியில் கூறினார்.
இந்தக் குழு உணர்வு 2025ஆம் ஆண்டும் அதையும் தாண்டியும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று கூறிய பிரதமர், 2025ஆம் ஆண்டு வரவுசெலவு திட்டத்தில் முன்னேறும் சிங்கப்பூரின் அடுத்த நிலைப்படிகளை தாம் அறிவிக்கப்போவதாக விளக்கினார்.
அந்த வரவுசெலவுத் திட்டம் பிப்ரவரி 18ஆம் தேதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும்.
முன்னேறும் சிங்கப்பூரில் கொள்கைகள் திருத்தப்பட்டு, மனப்போக்கு மாற்றி அமைக்கப்பட்டு சிங்கப்பூரர்களின் கனவுக்கு புத்துயிரூட்டப்படும் என்றார் அவர்.
“மேலும் நியாயமான, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவோம். இதில் அனைவருக்கும், அவர்களது வாழ்வு எந்த நிலையில் தொடங்கினாலும் அவர்கள் வெற்றிபெறும் வாய்ப்புகள் உறுதியாக இருக்கும். ஒவ்வொருவரும் தங்கள் கனவை நனவாக்கி, கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் வளமான எதிர்காலத்தை எதிர்பார்த்து வாழலாம்,” என்று பிரதமர் தெளிபடுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
அதிகரித்துவரும் புவிசார் அரசியல் பதற்றங்கள், தீவிரமான வானிலை நிகழ்வுகள், பேரிடர்கள், உலகளாவிய விலைவாசி உயர்வு போன்றவற்றால் 2024ஆம் ஆண்டு கொந்தளிப்பு மிக்கதாக இருந்தது என்பதைப் பிரதமர் நினைவுகூர்ந்தார். ஆனால், சிங்கப்பூரர்கள் ஒரு குழுவாக குழப்பம், நிச்சயமற்ற சூழல் ஆகியவற்றுக்கு இடையே இந்தச் சவால்களை எதிர்கொண்டு தழைத்தோங்கி நின்றதாக பிரதமர் கூறினார்.
விலைவாசி உயர்வு ஏற்படுத்தும் தாக்கத்தை மட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறிய பிரதமர் வோங், சமாளிக்க சிரமப்படுவோர், குறிப்பாக முதியோர், குறைந்த வருமானப் பிரிவினர் ஆகியோருக்கு கூடுதல் உதவி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
எனினும், மற்ற பிரிவினர், நடுத்தர வருமானப் பிரிவினர், முதியவர்கள், இளம் பிள்ளைகள் ஆகியோரைப் பராமரிக்கும் நடுவயது சிங்கப்பூரர்கள் போன்ற மற்ற பிரிவினரும் ஒதுக்கிவைக்கப்பட மாட்டார்கள் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
“எல்லாக் குடிமகனுக்கும் இந்த சமுதாயத்தில் ஒரு பங்கு, ஓர் இடம் உள்ளது. எவரும் பின்தங்கும் நிலை இருக்காது. ஏனெனில் இதில் நாம் அனைவரும் ஒன்றுபட்டுள்ளோம்,” என்று திரு லாரன்ஸ் வோங் கூறினார்.
இந்த இலக்குகளை எட்ட சிங்கப்பூர் பெரும் முயற்சிகளை எடுத்துள்ளதாகக் கூறிய பிரதமர், உதாரணத்துக்கு வீடமைப்புக் கொள்கைகள் மேம்படுத்தப்பட்டு வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் மேலும் கட்டுபடியாக இருப்பதைச் சுட்டினார்.
“நமக்கு ஏற்பட்ட பின்னடைவுகளிலிருந்து பாடம் கற்று, மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி சிங்கப்பூரர்களுக்கு தொடர்ந்து சிறந்த முறையில், ஒன்றுபட்டு, ஒற்றுமையுடன் சேவையாற்றி வருகிறோம்.
“இப்படித்தான், ஒன்றுபட்டும் ஒற்றுமையுடனும் நாம் இடைவிடாது இடையூறுகளை தாண்டி வந்துள்ளோம்,” என்று விளக்கினார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
சிங்கப்பூரின் முத்தரப்புப் பங்காளித்துவ முறை இதுபோல் ஒன்றுபட்டுச் செயல்படுவதை அடித்தளமாகக் கொண்டுள்ளது என்றார் பிரதமர்.
சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டுள்ளார்.