தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

போப் ஃபிரான்சிசுக்கு தமிழ் உட்பட நான்கு மொழியில் உற்சாக வரவேற்பு

2 mins read
70802dcb-3c0d-482e-b5ad-3bafb4ff2501
சிங்கப்பூரை வந்தடைந்த போப் ஃபிரான்சிஸ், மக்களின் உற்சாக வரவேற்பைப் பெற்றார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

திருத்தந்தை போப் ஃபிரான்சிஸ் தாம் மேற்கொண்டுள்ள 12 நாள் ஆசிய-பசிபிக் பயணத்தின் நிறைவு அங்கமாக செப்டம்பர் 11ஆம் தேதி மதியம் சிங்கப்பூர் வந்தடைந்தார். 

சிங்கப்பூருக்கு முதன்முறையாக வருகை தந்துள்ள போப் ஃபிரான்சிசைக் கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சர் எட்வின் டோங், அவரின் துணைவியார், வத்திகனுக்கான சிங்கப்பூர்த் தூதர் ஜேனட் ஆங் ஆகியோர் வரவேற்றனர்.

சிங்கப்பூரின் பல்லினச் சமூகத்தைப் பறைசாற்றும் வகையில் சீனம், மலாய், தமிழ், ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் வாழ்த்து கூறி, நான்கு சிறார்கள் போப்பாண்டவரை வரவேற்றனர். அவர்களுக்குப் பரிசுகளும் இனிப்பும் வழங்கி வாழ்த்தினார் போப் ஃபிரான்சிஸ்.

போப் ஃபிரான்சிஸ் வருகையைக் கத்தோலிக்கர்கள் மட்டுமல்லாது மொழி, இனம், சமயம் கடந்து பல்லின மக்களும் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். சிங்கப்பூரில் அவர் தரையிறங்கியதும் அவரை வரவேற்க அனைத்து வயதினரும் நூற்றுக்கணக்கில் திரண்டிருந்தனர்.

தீமோர் லெஸ்டெயின் டிலி நகர விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலம் சுமார் மூன்று மணிநேரம் பயணித்து சிங்கப்பூர் வந்தடைந்த 87 வயது போப்பாண்டவரை, வரவேற்புப்  பாதை நெடுகிலும் சூழ்ந்திருந்த மக்கள் தங்கள் கரங்களில் சிங்கப்பூர் தேசியக் கொடி மற்றும் வத்திகன் கொடியையும் அசைத்தவாறு மகிழ்ச்சி ததும்பப் பெரும் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சிறப்பு வாகனத்தின் இருக்கையில் அமர்ந்தவாறே மக்களின் அன்பான வரவேற்பை ஏற்றுக்கொண்ட போப்பாண்டவர், தாமும் உவகையுடன் கையசைத்துத் திரண்டிருந்தோருக்கு நல்லாசி வழங்கினார்.

கத்தோலிக்க தேவாலயங்கள் சார்பில் வாழ்த்து தாங்கிய வரவேற்பு பதாகைகள், கொடிகள் ஆகியவை பாதை நெடுகிலும் சூழ்ந்திருக்க, போப் அமர்ந்திருந்த வாகனம் தங்கள் அருகே வந்தவுடன் அவரை நேரில் கண்ட பரவசத்தில் பலர் கண்ணீர் சிந்தி போப் ஃபிரான்சிஸ் வருகைக்குத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

முன்னதாக, வெளியுறவு அமைச்சின் பிரதிநிதிகள் மற்றும் கத்தோலிக்க பேராயர் வில்லியம் கோ தலைமையிலான ரோமன் கத்தோலிக்க பேராயத்தினர் உள்ளிட்டோரும் வரவேற்பு நிகழ்வில் பங்கேற்றனர். 

செப்டம்பர் 2ஆம் தேதி, தமது ஆக நீண்ட ஆசியப் பயணத்தைத் தொடங்கிய போப் ஃபிரான்சிஸ், நிறைவு அங்கமாக சிங்கப்பூருக்கு வருகை தந்துள்ளார். அவருடன் வத்திகன் அரசாங்கப் பிரதிநிதிகள், உயரதிகாரிகள், பேராயர், ஆயர்கள் உள்ளிட்ட குழுவினரும் சிங்கப்பூர் வந்துள்ளனர். 

செப்டம்பர் 11ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மூன்று நாள்கள் போப் பிரான்சிஸின் அதிகாரத்துவப் சுற்றுப்பயணம் நீடிக்கும். பயணத்தின் முதல் நாளான இன்று (செப்டம்பர் 11) போப்பாண்டவர், கத்தோலிக்கத் திருச்சபையின் ‘Society of Jesus’ எனப்படும் இயேசு சபையின் அங்கத்தினரைச் சந்திக்கிறார்.

பயணத்தின் இரண்டாம் நாளான செப்டம்பர் 12ஆம் தேதி, அதிபர் தர்மன் சண்முகரத்னம், மற்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் உள்ளிட்டோரையும் போப் சந்தித்து பொது உரை ஆற்றவிருக்கிறார்.

1986ஆம் ஆண்டுக்குப் பிறகு கத்தோலிக்க போப் சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை என்பதால் இந்த வரலாற்றுப் பயணத்தில், உலகில் தற்சமயம் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு சமய நல்லிணக்கம், அனைத்துலக சமாதானம் உள்ளிட்ட பல அத்தியாயங்கள் புதுப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்