சிங்கப்பூரின் எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி 2026 அக்டோபரில் 79.8 விழுக்காடு ஏற்றம் கண்டது.
மின்னணு சாராப் பொருள்களின் வலுவான ஏற்றுமதியும் செயற்கை நுண்ணறிவுத் தேவையால் மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி அதிகரிப்புமே இதற்குக் காரணம்.
ஆண்டு அடிப்படையில் செப்டம்பரில் 68.3 விழுக்காடு கூடியிருந்த எண்ணெய் சாரா உள்நாட்டுப் பொருள் ஏற்றுமதி, அக்டோபரில் 79.8 விழுக்காடு வளர்ச்சி கண்டதாக என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 17) வெளியிட்ட தரவுகள் காட்டுகின்றன.
மின்னணு சாராப் பொருள்களின் ஏற்றுமதி செப்டம்பரில் 54.1 விழுக்காடு உயர்ந்திருந்த நிலையில், அக்டோபரில் ஆண்டு அடிப்படையில் 81.9 விழுக்காடு அதிகரித்தது. கப்பல் மற்றும் படகுக் கட்டுமானம், மருந்துப் பொருள்கள், தனித்துவ இயந்திரங்கள் ஆகியவை இந்த உயர்விற்கு முக்கியக் காரணமாக அமைந்தன. குறிப்பாக, மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி 253.1 விழுக்காட்டு வளர்ச்சியைப் பதிவுசெய்தது.
மின்னணுப் பொருள்களின் ஏற்றுமதி செப்டம்பரில் 107.6 விழுக்காடு உயர்ந்ததைத் தொடர்ந்து, வலுவான செயற்கை நுண்ணறிவுத் தேவை காரணமாக அக்டோபரில் 73.9 விழுக்காடு கூடியது. வட்டு ஊடகப் பொருள்கள் 189.6 விழுக்காடும், தனிநபர் கணினிகள் 81 விழுக்காடும், கணினிச் சில்லுகள் 53.1 விழுக்காடும் வளர்ச்சியடைந்தன.
அக்டோபரில் அமெரிக்கா, சீனா, தைவான் ஆகிய நாடுகளுக்கான எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதி அதிகரித்த நிலையில், இந்தியா, இந்தோனீசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கான ஏற்றுமதி சுருங்கியது.
தைவானுக்கான ஏற்றுமதி செப்டம்பரில் 96.9 விழுக்காடு உயர்ந்த நிலையில், அக்டோபரில் மின்னணு ஏற்றுமதி 149 விழுக்காடு அதிகரித்ததால் 79.3 விழுக்காடு கூடியது.
அதுபோல, சிங்கப்பூரின் தனிப்பெரும் ஏற்றுமதிச் சந்தையான அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 214.6 விழுக்காடும் சீனாவுக்கான ஏற்றுமதி 144.9 விழுக்காடும் உயர்ந்துள்ளன.
மாறாக, செப்டம்பரில் 5.7 விழுக்காடு சரிந்த இந்தியாவுக்கான ஏற்றுமதி, மின்னணு சாரா ஏற்றுமதி 51.9 விழுக்காடு குறைந்ததால் அக்டோபரில் 35.8 விழுக்காடு வீழ்ச்சியடைந்தது.
