இவ்வாண்டு தைப்பூசத்துக்காக ‘சிங்கை ஃபிரண்ட்ஸ்’ தொண்டர் குழுவின் வெளிநாட்டு ஊழியர்கள் 150 பேர், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கு 24 மணி நேரம் களமிறங்கவுள்ளனர்.
இக்குழு 2014ஆம் ஆண்டு முதல் பல கோயில்பணிகளுக்குத் தொண்டாற்றிவந்துள்ளது. தைப்பூசம், தீமிதி, பங்குனி உத்திரம், குடமுழுக்கு, மகா சிவராத்திரி, அன்னதானம் என அனைத்திலும் இக்குழு தவறாமல் பங்கேற்கிறது.
“வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் தூதராகப் பெற்ற அனுபவம் மூலம், சிங்கப்பூர்ச் சமூகத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. எங்கள் நெடுங்கால நண்பர் கவிதா ராஜூ பேராதரவு தந்தார்,” என்றார் குழுவைத் தோற்றுவித்த திரு சுப்பையா அய்யப்பன், 51. அவர் சென்ற ஆண்டு மே தின விருது, சிங்கப்பூர்க் காவல்துறை விருதுகளைப் பெற்றார்.
“குடமுழுக்கு, தீமிதியின்போது மழையையும் பொருட்படுத்தாது தொண்டாற்றினோம்,” என்று நினைவுகூர்ந்தார் மற்றொரு நெடுங்காலத் தொண்டூழியரான திரு பழனியப்பன் சுப்பையா.
சென்ற ஆண்டு தைப்பூசத்தின்போது டோபி காட் பகுதியிலும் ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலிலும் இக்குழு தொண்டாற்றியது. இவ்வாண்டு முதன்முறையாக மூன்று பகுதிகளில் தொண்டாற்றவிருக்கிறது.
“இம்முறை ஸ்ரீ தெண்டாயுதபாணி கோயிலின் வெளிப்புறத்தில் 12 இடங்களில் எங்கள் தொண்டூழியர்கள் இருப்பார்கள்,” என்றார் திரு ஜெயராமன் மணிமாறன்.
டோபி காட் பகுதியில் தொண்டூழியர்களை இரண்டாம் முறையாக நிர்வகிக்கின்றனர் திரு திவாகர், திரு தினேஷ். தேங்க் ரோடு பகுதியில் திரு ராஜமாணிக்கம் மணிகண்டனும் பெருமாள் கோயில் பகுதியில் திரு செந்தமிழ் செல்வனும் நிர்வகிப்பர்.
ஞாயிற்றுக்கிழமை, சாங்கி ராமர் கோயிலில் இக்குழுவைச் சேர்ந்த பத்துப் பேர் அன்னதானத்துக்கு உதவவுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
“இங்குத் தொண்டூழியம் புரியத் தொடங்கியதிலிருந்து மன அமைதியும் வாழ்க்கைமுறையும் மேம்பட்டுள்ளது,” என்றார் திரு பார்த்திபன். கோயில் பணிகளுக்கு அப்பாற்பட்டு, அவர் முதியோர் இல்லங்களிலும் தொண்டாற்றியுள்ளார். முதியோரின் வீடுகளைச் சுத்தப்படுத்தியுள்ளார்.
“தொண்டூழியம் செய்யும் வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. அதனால் நான் அவ்வாய்ப்பைச் சிறப்பாகப் பயன்படுத்துகிறேன்,” என்றார் திரு செந்தில்.
ஞாயிற்றுக்கிழமை தன் மகளின் பிறந்தநாளாக இருந்தபோதும் தைப்பூசத்துக்காகக் கோயிலில் தொண்டாற்றுகிறார் தொண்டூழியர் செல்வம்.
ஆறு மாதங்களாகத் தொண்டாற்றும் திரு அஜித்குமார், 30, “பெருமாள் கோயில் அன்னதானத்தின்போது இக்குழுவைச் சந்தித்தேன்; என் சமூக ஊடகத்தளத்தில் இக்குழுவைப் பற்றிய காணொளிகளைப் பதிவேற்றினேன். அதையடுத்து மேலும் ஈடுபாட்டுடன் கலந்துகொள்ள ஆர்வம் வந்தது,” என்றார்.
“கோயில் குடமுழுக்குக்கான யாகசாலைகள் அமைப்பதிலும் அலங்கரிப்பதிலும் பங்காற்றியது எனக்கு மனநிறைவை அளித்தது,” என்றார் திரு துரை சிதம்பரம்.
கடந்த ஈராண்டுகளாகத் தொண்டூழியர்களை அங்கீகரிக்கும் நிகழ்ச்சியையும் இக்குழு நடத்திவருகிறது.
இதையடுத்து, அருள்மிகு வேல்முருகன் ஞானமுனீஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரிக்கும் பிப்ரவரி 22ஆம் தேதி ஸ்ரீ அரசகேசரி சிவன் கோயில் குடமுழுக்கிற்கும் இக்குழு தொண்டாற்றவுள்ளது.
‘சிங்கை ஃபிரண்ட்ஸ்’ குழுவில் சேர விரும்புவோர் 80196519 எண்ணில் திரு அய்யப்பனைத் தொடர்புகொள்ளலாம்.

