சிங்கப்பூரில் ‘எம்பாக்ஸ்’ நோய்த்தொற்றைச் சமாளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் கூறியுள்ளார்.
செப்டம்பர் 4ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், முன்னர் குரங்கம்மை என்று குறிப்பிடப்பட்ட ‘எம்பாக்ஸ்’ தொற்றுப் பரவலைக் கையாள்வதன் தொடர்பில் சிங்கப்பூரின் தயார்நிலை குறித்த விவரங்களை அவர் விவரித்தார்.
இவ்வகைத் தொற்று பரவக்கூடிய ஆபத்து அதிகமுள்ள சுகாதார ஊழியர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்ததாக அறியப்படுவோருக்கும் ‘எம்பாக்ஸ் கிளேட் 1’ திரிபுக்கு எதிரான தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
செப்டம்பர் 3ஆம் தேதி வரை சிங்கப்பூரில் ‘எம்பாக்ஸ் கிளேட் 1’ திரிபுத் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்த ஆண்டு இங்குப் பதிவான ‘எம்பாக்ஸ்’ தொற்றுகள் கடுமையற்ற ‘கிளேட் 2’ திரிபால் ஏற்பட்டவை என்றும் தெரிவித்தார்.
ஆப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு ‘எம்பாக்ஸ் கிளேட் 1’ திரிபுத் தொற்று பரவும் அபாயம் குறைவு என்றும் இந்நோய்ப் பரவலுக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளுக்கும் சிங்கப்பூருக்கும் இடையே நேரடி விமானச் சேவைகள் இல்லை என்றும் அவர் விவரித்தார்.
மேலும், போக்குவரத்து அமைச்சு, குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து ‘எம்பாக்ஸ்’ தொற்றுக்கு எதிராக எல்லைகளில் கண்காணிப்பு, பரிசோதனை நடைமுறைகளைச் சுகாதார அமைச்சு செயல்படுத்திவருவதாகவும் திரு ஓங் கூறினார்.
அந்தக் கிருமிப்பரவல் அதிகரித்தால் அபாயக்கூறு அதிகரிக்கலாம் என்று கூறிய அவர், வரும் மாதங்களில் ‘எம்பாக்ஸ் கிளேட் 1’ திரிபால் சிங்கப்பூரில் பாதிப்பு ஏற்படக்கூடும்; அதற்கு ஏற்றவகையில் நாம் ஆயத்தமாக இருக்கவேண்டும் என்று சொன்னார். உலகளாவிய நிலையில் ‘எம்பாக்ஸ்’ தொற்றுப் பரவல் நிலவரத்தை அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்த திரு ஓங், எதிர்வரும் மாதங்களில் இந்நோயின் தன்மை குறித்த மேம்பட்ட தரவுகள் கிடைக்கக்கூடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
மருத்துவர்களும் சுகாதார அமைப்புகளும் விழிப்புநிலையில் இருக்குமாறும் ‘எம்பாக்ஸ்’ நோய்த்தொற்று பாதிப்பு, பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களைச் சுகாதார அமைச்சுக்கு உடனடியாகத் தெரிவிக்கும்படியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மேலும், வெளிநாட்டு ஊழியர்களுக்கான தங்குவிடுதிகளிலும் ‘எம்பாக்ஸ்’ நோய்த்தொற்றுக்கு எதிரான சுகாதார நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
பாலர் பள்ளிகளிலும் சிறப்புத் தேவையுடையோருக்கான பள்ளிகள் உள்ளிட்ட இதர பள்ளிகளிலும் தற்போது பின்பற்றப்படும் பிற நோய்கள் தொடர்பான சுகாதார நடவடிக்கைகள் இதற்கும் பொருத்தமாக இருப்பதாகச் சுகாதார அமைச்சின் அறிக்கை குறிப்பிட்டது.