சிங்கப்பூரும் ஜெர்மனியும் மின்னிலக்கக் கட்டமைப்பில் குறிப்பாகத் தொழில்துறைகளுக்கான செயற்கை நுண்ணறிவு மேம்பாட்டிலும் அதன் நிர்வகிப்பிலும் வலுவாக ஒத்துழைக்க முடிவெடுத்துள்ளன.
ஜெர்மனியின் பிரதமர் ஃபிரீடிரக் மெர்ட்ஸ், சிங்கப்பூருக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 27) குடியரசு வந்தடைந்தார்.
அவரை நாடாளுமன்றத்தில் வரவேற்றுப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு பிரதமர் லாரன்ஸ் வோங் அவருடன் இணைந்து கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இரு தலைவர்களும் பயனுள்ள வகையில் விவாதித்ததாகத் தெரிவித்தார் பிரதமர் வோங். மேலும், உத்திபூர்வப் பங்காளித்துவ உடன்பாட்டின்படி, இருநாடுகளும் பல துறைகளில் இணைந்து சிறந்த முறையில் அவற்றில் செயல்பட முடியும் என்பதை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேம்படுத்தப்பட்டுள்ள திட்டப்படி, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), மின்னிலக்கப் பொருளியல், ஆய்வு, புத்தாக்கம் ஆகியவற்றுடன் ஆசியான் கூட்டமைப்புடன் ஒத்துழைப்பு போன்ற பல அம்சங்கள் அதில் உள்ளடங்கியுள்ளன.
ஏற்கெனவே, 2024ஆம் ஆண்டில் செய்யப்பட்ட செயல்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தற்போதைய உத்திபூர்வத் திட்டம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
“புவியியல் வரைபடத்தில் இருவேறு பகுதிகளில் சிங்கப்பூரும் ஜெர்மனியும் அமைந்திருக்கலாம். ஆயினும் பல பொதுவான அம்சங்களை நாங்கள் பகிர்வதோடு அவற்றில் இருநாடுகளும் நம்பிக்கை வைத்துள்ளோம். அதனை இன்று காலை நடந்த கருத்துப் பரிமாற்றம் வெளிப்படுத்துகிறது,” என்றார் திரு வோங்.
“கடந்த அறுபது ஆண்டுகளாகப் பகிரப்படும் இந்த நம்பிக்கை எங்களது நட்புறவுக்கு அடித்தளமாக அமைத்துள்ளது. பிளவுபட்டு, நிச்சயமற்ற நிலையை அடைந்துள்ள உலகில் எங்களது நல்லுறவு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. அந்த நட்புறவே நம் இருநாடுகளுடன் இருவேறு வட்டாரங்களையும் ஒருங்கிணைக்க முக்கியக் காரணமாக அமைகிறது,” என்றார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
பிரதமர் லாரன்ஸ் தெரிவித்த கருத்துகளை ஆமோதித்த ஜெர்மானியப் பிரதமர் மெர்ட்ஸ், சிங்கப்பூரும் ஜெர்மனியும் நீண்டநாள் செயல்படும்விதமாக அவற்றின் உத்திபூர்வப் பங்காளித்துவத்தை மேம்படுத்துவதில் உறுதியுடன் கவனம் செலுத்தவுள்ளதாகக் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு குறித்துக் கருத்துரைத்த பிரதமர் வோங், வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி, இருநாட்டுப் பொருளியலை மாற்றியமைக்கும் திறன் ‘ஏஐ’ தொழில்நுட்பத்துக்கு உள்ளது என்பதை இரு தலைவர்களும் உணர்ந்துள்ளனர் என்றார்.
அதனால்தான், மின்னிலக்கத் தொழில்நுட்பத்தையும் கடந்து செயற்கை நுண்ணறிவுத் திறனைத் தொழில்துறைகளில் இணைந்து அறிமுகப்படுத்த இருநாடுகளும் விரும்புவதாகக் கூறினார்.
