சிங்கப்பூர், காஸாவுக்கான ஐந்தாம் கட்ட மனிதாபிமான உதவியை வழங்கவிருக்கிறது.
அதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதிக்கு சிங்கப்பூர் அளித்திருக்கும் மொத்த நன்கொடையின் மதிப்பு ஏறக்குறைய $18 மில்லியன்.
வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லியும், ரஹ்மத்தன் லில் ஆலமின் அறநிறுவனம் ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதியத்துக்கு நன்கொடையை ஒப்படைக்கும் நிகழ்வைப் பார்வையிட்டனர்.
ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதியின் மனிதாபிமான நிவாரணப் பணிகளுக்கு, அந்த அறநிறுவனம் காஸாவுக்கான தற்போதைய நிதி திரட்டு இயக்கத்திலிருந்து $700,000 வழங்கும் என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியது.
இதற்கிடையே, காஸாவில் மனிதாபிமான சண்டைநிறுத்தத்தை எட்டுமாறும் தற்போதைய இஸ்ரேல் - பாலஸ்தீனச் சண்டையில் அனைத்துப் பிணையாளிகளையும் நிபந்தனைகளின்றி உடனடியாக விடுவிக்குமாறும் குடியரசு தொடர்ந்து எல்லாத் தரப்புகளையும் கேட்டுக்கொள்வதாக டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாலஸ்தீன அகதிகளுக்கு உதவும் ‘யூஎன்ஆர்டபிள்யூஏ’ (UNRWA), இஸ்ரேலிலும் கிழக்கு ஜெருசலத்திலும் செயல்படுவதைத் தடைசெய்யும் இஸ்ரேலின் அண்மைய சட்டம் குறித்து சிங்கப்பூர் ஆழ்ந்த கவலை அடைந்திருப்பதாகவும் டாக்டர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
அந்தச் சட்டம் அக்டோபர் 28ஆம் தேதி நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
காஸாவிலும் அதற்கு அப்பாலும் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் ஐக்கிய நாடுகள் நிறுவன அமைப்புகளின் முக்கியப் பணிகளுக்கு அது எத்தகைய இடையூறாக இருக்கும் என்பதுதான் கவலை என்றார் அமைச்சர்.
தொடர்புடைய செய்திகள்
“காஸாவில் உயிர்களைக் காப்பாற்ற ஐக்கிய நாட்டுக் குழந்தைகள் நிதி (யுனிசெஃப்), ‘யூஎன்ஆர்டபிள்யூஏ’, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் மற்ற அமைப்புகள் ஆகியவற்றின் பணிகளை சிங்கப்பூர் பாராட்டுகிறது,” என்று டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.
அனைத்துத் தரப்புகளும் அனைத்துலகச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

