சிங்கப்பூரில் காசநோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த ஆண்டு சற்று சரிந்தது. மேலும், காசநோயால் மாண்டோர் எண்ணிக்கையும் குறைந்தது.
காசநோயால் கடந்த ஆண்டு 11 பேர் உயிரிழந்தனர். 1,019 பேரிடம் அந்நோய் கண்டறியப்பட்டது.
அதற்கு முந்தைய ஆண்டு காசநோயால் மாண்டோர் எண்ணிக்கை 20. அவ்வாண்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,156.
2024ஆம் ஆண்டு காசநோயால் உலக அளவில் 1.23 மில்லியன் பேர் மாண்டனர். 10.7 மில்லியனுக்கும் அதிகமானோர் காசநோயால் பாதிக்கப்பட்டனர்.
மார்ச் 24ஆம் தேதி உலக காசநோய் தினம் அனுசரிக்கப்படும் நிலையில் சிங்கப்பூரின் தொற்றுநோய் அமைப்பு புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
மனிதர்களின் நுரையீரலைப் பாதிக்கும் காசநோய் குணமாக்கக்கூடியது, தவிர்க்கக்கூடியது.
2025ஆம் ஆண்டு காசநோய் உறுதிசெய்யப்பட்ட 1,019 பேரில் 77.3 விழுக்காட்டினர் அதாவது 788 பேரின் வயது 50 அல்லது அதற்கும் அதிகம்.
காசநோயால் புதிதாகப் பாதிக்கப்பட்டோரில் 65.6 விழுக்காட்டினர் அதாவது 688 பேர் ஆண்கள். 34.4 விழுக்காட்டினர் அதாவது 351 பேர் பெண்கள்.
தொடர்புடைய செய்திகள்
2025ஆம் ஆண்டு 72 பேர் காசநோயால் மீண்டும் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 56 பேர் ஆண்கள், 16 பேர் பெண்கள்.
காசநோய் சிங்கப்பூரில் நிரந்தர நோயாக வகைப்படுத்தப்பட்டுள்ளபோதும் அண்மை ஆண்டுகளில் அதனால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துவருகிறது.
காசநோய் சிங்கப்பூரில் பரவவில்லை என்ற தொற்றுநோய் அமைப்பு, பாதிக்கப்பட்டோரிடம் அறிகுறிகள் தென்படுவதில்லை என்றது.
எனினும், வாழ்க்கையின் பிற்பகுதியில் நோய் எதிர்ப்பாற்றல் குறையும்போது காசநோயின் வீரியம் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
காசநோயால் பாதிக்கப்பட்டோருக்குச் சிங்கப்பூரில் மருத்துவ விடுப்பு வழங்கப்படுவதுடன் உடனடி சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
ஒட்டுமொத்த சிகிச்சை காலம் ஆறிலிருந்து ஒன்பது மாதங்கள் வரை நீடிக்கலாம் என்று தொற்றுநோய் அமைப்பு தெரிவித்தது.


