வர்த்தக, தொழில் அமைச்சு இந்த ஆண்டுக்கான (2025) பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பை உயர்த்தியுள்ளது.
ஆண்டின் முற்பாதியில் எதிர்பார்க்கப்பட்டதைவிட சிறப்பான பொருளியல் வளர்ச்சி பதிவானதால் முன்னுரைப்பை உயர்த்தியதாக செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 12) அது கூறியது.
இருப்பினும் அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படக்கூடிய நிச்சயமற்றதன்மை சிங்கப்பூரின் பொருளியலில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து அமைச்சு எச்சரித்தது.
இந்த ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 1.5 விழுக்காடு முதல் 2.5 விழுக்காடு வரை பதிவாகும் என்று அமைச்சு தற்போது முன்னுரைத்துள்ளது. முன்னர் அது பூஜ்ஜியம் முதல் 2 விழுக்காடு வரை இருக்கக்கூடும் என முன்னுரைக்கப்பட்டிருந்தது.
இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளியல் ஆண்டு அடிப்படையில் 4.4 விழுக்காடு வளர்ச்சி கண்டது.
முதலாம் காலாண்டில் அந்த விகிதம் 4.1 விழுக்காடாக இருந்தது.
இதையடுத்து இந்த ஆண்டின் முற்பாதியில் சிங்கப்பூர்ப் பொருளியல் 4.3 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.
அமைச்சு முந்தைய முன்னுரைப்பைக் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்டிருந்தது. அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதிய வரி விதிப்புக் கொள்கையை அறிவித்த சில நாள்களில் அது வெளியானது.
தொடர்புடைய செய்திகள்
முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும்பாலான நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு வரி விதிக்கப்படும் என்று திரு டிரம்ப் அறிவித்திருந்தார்.
ஆனால், இப்போது பெரும்பாலான வரிகள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு குறைக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் உலகெங்குமுள்ள நிறுவனங்கள் வரிகள் நடப்புக்கு வருமுன் சரக்குகளை அனுப்புவதில் முனைந்தன.
இதனால் உற்பத்தியும் ஏற்றுமதியும் வெகுவாக அதிகரித்தன.
இத்தகைய சூழலில் இந்த ஆண்டு முற்பாதியில் சிங்கப்பூரின் முக்கிய ஏற்றுமதிகள், ஆண்டு அடிப்படையில் 5.2 விழுக்காடு அதிகரித்தன.
முன்னர் அது 1 முதல் 3 விழுக்காடாக இருக்குமென என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு முன்னுரைத்திருந்தது.
இரண்டாம் காலாண்டில் மொத்த விற்பனை, உற்பத்தி, நிதி, காப்புறுதி, போக்குவரத்து போன்ற ஏற்றுமதி சார்ந்த துறைகளால் பொருளியல் வளர்ச்சி சாத்தியமானதாக அமைச்சு கூறியது.
உணவு, பானச் சேவைகள் போன்ற உள்நாட்டுத் துறைகளில் வளர்ச்சி குறைந்தது.
இவ்வேளையில், புதிய வரிகளால் பொருளியல் நிச்சயமற்றதன்மை அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சு எச்சரித்துள்ளது.
இதனால் வர்த்தகங்கள் ஆட்சேர்ப்பைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கக்கூடும் என்றும் குடும்பங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்ள நேரிடும் என்றும் அது குறிப்பிட்டது.
உலகளாவிய நிதி நிலைமை மோசமடைந்தால் வங்கி, நிதிக் கட்டமைப்புகளின் நிலைத்தன்மை பாதிப்புக்குள்ளாகலாம் என்று அமைச்சு சொன்னது.
மேலும், புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரித்தால் எரிசக்திப் பொருள்களின் விநியோகம் தடைப்படலாம் என்றும் உலகளாவிய நிலையில் எரிபொருள்களின் விலை அதிகரிக்கலாம் என்றும் வர்த்தக, தொழில் அமைச்சு கூறியுள்ளது.