சிங்கப்பூர், காஸாவில் நடந்த சண்டையில் கை, கால்களை இழந்த பாலஸ்தீனர்களுக்குக் கிட்டத்தட்ட $250,000 பெறுமானமுள்ள செயற்கை உறுப்புகளை வழங்கியிருக்கிறது.
கைகால்களை இழந்த 100 பேர் அவற்றின் மூலம் பலன் பெறுவர். சுகாதார அமைச்சர் ஓங் யி காங், புதன்கிழமை (நவம்பர் 12) தமது ஃபேஸ்புக் பதிவில் அதனைத் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டோரிடையே நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட ஜோர்தான் முன்னெடுத்துள்ள முயற்சியின் ஒரு பகுதி அது. காஸா போரில் கைகால்களை இழந்தவர்களுக்குச் செயற்கை உறுப்புகளைக் கொடுப்பது அதன் நோக்கம்.
பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்குமான செயற்கை உறுப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. டான் டோக் செங் மருத்துவமனை, ஜோர்தான் மருத்துவத்துறை ஆகியவற்றின் நிபுணர்கள் அவற்றைத் தெரிவுசெய்தனர்.
சுகாதார அமைச்சின் குழுவொன்று இவ்வாரம் ஜோர்தான் சென்றுள்ளது. சிங்கப்பூர் மேலும் எவ்வாறு மருத்துவ உதவிகளைச் செய்யமுடியும் என்பது குறித்து உள்ளூர் அதிகாரிகளுடன் குழுவினர் கலந்துபேசுவர் என்று திரு ஓங் தெரிவித்தார்.
சிங்கப்பூர் அரசாங்கத்தைப் பிரதிநிதித்து முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், செயற்கை உறுப்புகளை வழங்குவதற்காக ஜோர்தான் சென்றுள்ளார். செயற்கை உறுப்புகளைத் திரட்டியதற்காக இணைப் பேராசிரியர் ஃபைஷாலுக்கும் ஜோர்தான் சென்றுள்ள குழுவினருக்கும் மருத்துவத்துறை ஊழியர்களுக்கும் திரு ஓங் நன்றி தெரிவித்தார்.
பலவற்றை இழந்தோரின் மரியாதை, நடமாட்டம், நம்பிக்கை முதலியவற்றை மீண்டும் நிலைநாட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி அது என்று இணைப் பேராசிரியர் ஃபைஷால், தமது ஃபேஸ்புக் பதிவில் புதன்கிழமை குறிப்பிட்டார்.
“நெருக்கடிக் காலங்களில் அர்த்தமுள்ள வகையில் மனிதநேய உதவிகளை வழங்குவதற்குச் சிங்கப்பூர் கொண்டுள்ள கடப்பாட்டின் ஒரு பகுதி அது,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர், இதுவரை காஸாவுக்குப் பத்துத் தொகுப்புகளாக மனிதநேய, நிதி உதவிகளைச் செய்துள்ளது. அவற்றின் மொத்த மதிப்பு 18 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (S$23 மில்லியன்) அதிகம்.
இவ்வாண்டு மார்ச் மாத நிலவரப்படி, கிட்டத்தட்ட 4,500 பேருக்குச் செயற்கைக் கைகால்கள் தேவைப்பட்டதாக ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் மனிதநேய அமைப்பு மதிப்பிட்டிருந்தது. அவர்களைத் தவிர அதற்கு முன்பு கைகால்களை இழந்த 2,000 பேருக்கு செயற்கை உறுப்புகளைப் பராமரிப்பதற்கும் தொடர்-மருத்துவச் சிகிச்சைக்கும் உதவி தேவைப்பட்டது.

