சிங்கப்பூரில் சராசரியாக ஒரு ஹோட்டல் அறையின் வாடகை கடந்த நவம்பர் மாதம் சற்று அதிகரித்து 273.11 வெள்ளியாகப் பதிவானது.
கடந்த அக்டோபர் மாதம் பதிவான 271.71 வெள்ளியைவிட அது 0.5 விழுக்காடு அதிகம். சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் திங்கட்கிழமையன்று (டிசம்பர் 30) வெளியிட்ட புள்ளி விவரங்களில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது.
மேலும், ஹோட்டல் அறை ஒன்றின் சராசரி வாடகை ஆண்டு அடிப்படையில் 1.2 விழுக்காடு கூடியுள்ளது.
காலியாக இருக்கும் ஒவ்வோர் அறையின் மூலம் வரும் வருவாய் நவம்பரில் ஒரு விழுக்காடு கூடி 224.45 வெள்ளியாகப் பதிவானது. அக்டோபரில் அத்தொகை 222.28 வெள்ளியாக இருந்தது.
எனினும், இவ்வாண்டின் கடைசி இரு மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் ஹோட்டல் அறை வருவாய், அதற்கு முந்தைய ஒரு மாத காலத்தில் பதிவான 440.1 மில்லியனிலிருந்து 430.4 மில்லியன் வெள்ளியாகப் பதிவானது. அதேவேளை, ஆண்டு அடிப்படையில் அத்தொகை 7.4 விழுக்காடு அதிகரித்தது.
நவம்பர் மாதம் முழுவதற்கும் காலியாக இருந்த ஹோட்டல் அறைகளை அம்மாதத்தின் நாள்களுடன் பெருக்கி (available room nights) கணக்கிடப்படும் விகிதம் 1.9 மில்லியனாகப் பதிவானது. கடந்த அக்டோபர் மாதம் பதிவான கிட்டத்தட்ட இரண்டு மில்லியனுடன் ஒப்பிடுகையில் அந்த விகிதம் குறைவாகும். எனினும், ஆண்டு அடிப்படையில் நவம்பரில் விகிதம் 0.2 மில்லியன் அதிகரித்தது.
நவம்பரில் ஹோட்டல் அறைகளின் சராசரிப் பயன்பாட்டு விகிதம் (occupancy rate) அக்டோபரில் பதிவானதைவிட சற்று அதிகரித்து 82.2 விழுக்காடாகப் பதிவானது. ஆண்டு அடிப்படையில் நவம்பர் பதிவான விகிதம் 3.5 விழுக்காடு அதிகமாகும்.
சிங்கப்பூருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவரும் சூழலில் ஹோட்டல் அறை தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. நவம்பர் மாதம் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை மாத அடிப்படையில் 6.1 மில்லியன் குறைந்து 1.2 மில்லியனாகப் பதிவானது. ஆண்டு அடிப்படையில் பயணிகள் எண்ணிக்கை 12.2 விழுக்காடு அதிகரித்தது.