சிங்கப்பூர் - இந்தியா இணைந்து செயல்பட வளமான வாய்ப்புகள்: துணைப் பிரதமர் கான்

ஆறு துறைகளில் அதிக ஒத்துழைப்பு

2 mins read
6d0cf53a-9c5f-4090-8d2e-75f7c0667390
சிங்கப்பூர் அமைச்சர்கள் அறுவரும் இந்திய அமைச்சர்கள் நால்வரும் பங்கேற்ற வட்டமேசைச் சந்திப்பு புதுடெல்லியில் புதன்கிழமை (ஆகஸ்ட் 14) நடைபெற்றது. - படம்: இந்திய வெளியுறவு அமைச்சு

சிங்கப்பூரும் இந்தியாவும் தங்களது 60 ஆண்டுகால அரசதந்திர உறவுகளைக் கொண்டாடும் வேளையில், வணிகத்தில் இரு நாடுகளுக்கும் இடையே போட்டி இருந்தாலும் முக்கியத் துறைகளில் இணைந்து செயல்பட வளமான வாய்ப்புகள் ஏராளம் உள்ளன என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் நடைபெற்ற இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான மூன்றாவது அமைச்சர்நிலை வட்டமேசைச் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் கான், புதன்கிழமை (ஆகஸ்ட் 13) உள்ளூர் நேரப்படி இரவு 11.30 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

இந்தக் காணொளிவழிச் சந்திப்பில் இரு நாடுகளும் பல்வேறு துறைகளில் இணைந்து எழுதவுள்ள புதிய அத்தியாயம் குறித்து பல்வேறு தகவல்களை அவர் விவரித்தார்.

அதன்படி, இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுவாக்க நீடித்த நிலைத்தன்மை, மின்னிலக்கமயம், திறன் மேம்பாடு, சுகாதாரம் மற்றும் மருத்துவம், உற்பத்தி மேம்பாடு உள்ளிட்ட ஆறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கம் செய்வது குறித்து இருநாட்டுத் தலைவர்களும் கலந்தாலோசித்தனர்.

குறிப்பாக, பசுமை எரிசக்தி, பசுமைப் பொருளியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, அணுவாற்றல் சார்ந்த துறைகளில் இருநாடுகளும் எவ்வகையில் இணைந்து செயலாற்றுவது என்பது குறித்தும் வட்டமேசைச் சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாக வர்த்தக, தொழில் அமைச்சருமான திரு கான் கூறினார்.

‘’நீடித்த நிலைத்தன்மை சார்ந்த தொழில்துறைப் பூங்காவில் சிங்கப்பூர் வர்த்தகர்கள் கொண்டுள்ள நாட்டம், அதற்கான சாத்தியக்கூறுகள், அதன் தொடர்பில் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் கொண்டுள்ள ஆர்வத்தை எடுத்துரைத்தோம்,” என்றும் அவர் சொன்னார்.

திறன்மேம்பாட்டில் கைகொடுக்க ஆர்வம்

இருநாடுகளும் மின்னிலக்கமயமாதலில் மிகுந்த ஈடுபாடு கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட துணைப் பிரதமர், பகுதி மின்கடத்தி மற்றும் ‘எம்ஆர்ஓ’ எனப்படும் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, செம்மையாக்கம் சார்ந்த பயிற்சி நிலையங்கள் அமைப்பது குறித்தும் கலந்துரையாடியதாகக் கூறினார்.

“இந்திய ஊழியரணியின் திறன்மேம்பாட்டிற்குக் கைகொடுக்கும் வகையில் உன்னத தேசிய நிலையத்தை நிறுவ சிங்கப்பூர் ஆர்வமாக உள்ளது,” என்றும் அவர் சொன்னார்.

சவால்கள் குறித்தும் பேசிய அவர், “இந்தியாவிற்குத் தேவைப்படும் திறன்கள், பயிற்சிகள், கட்டமைப்புகள் சிங்கப்பூரின் அனுபவங்களிலிருந்து மாறுபட்டவையாக இருக்கலாம். இந்தியாவின் வளர்ச்சி சார்ந்த துறைகளில் சிங்கப்பூர் எவ்வாறு முதலீடு செய்யலாம் என்பதைக் கருத்தில் கொள்ளும் அதேவேளையில், நமது நாட்டிற்கு இன்றியமையாத முக்கியத் தொழில்துறைகளில் மிகுந்த கவனம் செலுத்தப்படும். வேலைவாய்ப்பு, வளர்ச்சி, வாய்ப்புகள், பொருளியல் மேம்பாடு என அனைத்திலும் இருநாடுகளும் ஒருங்கிணைந்து முன்னேற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்,” என்று தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொண்டபோது இருநாட்டு உறவானது விரிவான உத்திபூர்வ பங்காளித்துவம் என்ற நிலைக்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்இந்தியாஅரசதந்திர உறவுதொழில்துறைஅரசியல்