சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர்-இந்தியா ஹேக்கத்தான் 2026 ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) தொடங்கியது.
நவம்பர் 15 முதல் 17ஆம் தேதி வரை ஹேக்கத்தான் நடைபெறுகிறது. அதில் இரு நாடுகளையும் சேர்ந்த 120 உயர்கல்வி மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
சிங்கப்பூரின் கல்வி அமைச்சர் டெஸ்மண்ட் லீயும் இந்தியக் கல்வி,நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர்.
சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவோம் என்ற கருப்பொருளில் அந்த ஹேக்கத்தான் நடக்கிறது.
2018ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த ஹேக்கத்தான் ஏற்பாடு முதலில் முன்மொழியப்பட்டது. இப்போது அது நான்காவது முறையாக நடக்கிறது.
எஸ்எம்யு புத்தாக்க தொழில்முனைப்பு துறை, அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமம், இந்தியக் கல்வி அமைச்சின் புத்தாக்கப் பிரிவு ஆகியவை இணைந்து ஹேக்கத்தானுக்கு ஏற்பாடு செய்தன.
இரு நாடுகளையும் சேர்ந்த 20 குழுக்கள் நவம்பர் 17ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் தங்கள் தீர்வுகளைப் படைக்கும். வெற்றிபெறுவோருக்கு 88,000 வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
மாணவர்கள் போட்டியில் மட்டும் பங்கேற்காமல் தொழில் நிறுவனத் தலைவர்கள், வழிகாட்டிகளுடன் தொடர்புகொள்ளவும் தங்களது நம்பிக்கையான யோசனைகளை முன்னெடுத்துச் செல்லவும் இந்த நிகழ்ச்சி வாய்ப்பளிக்கிறது.
இரு நாடுகளிலும் உள்ள 55 உயர்கல்வி நிலையங்களைச் சேர்ந்த மாணவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், நிதித் தொழில்நுட்பம், காப்புறுதித் தொழில்நுட்பம், நீடித்த நிலைத்தன்மை, பருவநிலை நடவடிக்கை, சமூகப் புத்தாக்கம் ஆகிய நான்கு பிரிவுகளில் மாணவர்கள் புதிய தீர்வுகளை உருவாக்குவர்.
இந்தியாவுடனான உறவை ஆழமாக்க எஸ்எம்யு பெருமுயற்சி எடுத்து வருவதாகப் பேராசிரியர் சன் சன் லிம் தெரிவித்தார்.
