ஜூலை 6ல் சிங்கப்பூர் - இந்தோனீசியத் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பு

ஜூலை 6ல் சிங்கப்பூர் - இந்தோனீசியத் தலைவர்கள் ஓய்வுத்தளச் சந்திப்பு

2 mins read
இரு தலைவர்களுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பு ஆழமான இருதரப்பு உறவை மேலும் வலுவாக்கும்
95296c22-c702-4ede-b469-fd8f49f72523
பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோவும் 2025ஆம் ஆண்டு, ஜூன் 16ஆம் தேதி சிங்கப்பூர் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பு முடிந்து கைகுலுக்கிக் கொண்டனர். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூருக்கும் இந்தோனீசியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் லாரன்ஸ் வோங் திங்கட்கிழமை (ஜூலை 6) இந்தோனீசியாவிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.

ஜகார்த்தாவில் நடைபெறும் இரு நாடுகளின் தலைவர்களின் வருடாந்தர ஓய்வுத்தளச் சந்திப்பில் அவர் கலந்துகொள்கிறார் என்று பிரதமர் அலுவலகச் செய்தி ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) தெரிவித்தது.

இரு நாடுகளுக்குமிடையேயான ஆழமான, நீண்டகால இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதில் இரு அரசாங்கங்களும் கொண்டுள்ள கடப்பாட்டை தலைவர்களின் ஓய்வுத்தளச் சந்திப்பு மறுஉறுதிப்படுத்துவதாக அறிக்கை கூறியது.

இரு தலைவர்களுக்கும் இடையிலான இரண்டாவது சந்திப்பாகவும், இந்தோனீசியாவில் நடைபெறும் அவர்களின் முதலாவது சந்திப்பாகவும் இது அமைகிறது.

ஜகார்த்தாவில் நடைபெறும் சந்திப்பு, இரு நாடுகளுக்கும் பொதுவான நலனையும் பலனையும் தரும் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.

கடந்த சந்திப்பிற்குப் பிறகு தொடங்கப்பட்ட இருதரப்பு பங்காளித்துவத் திட்டங்களின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்தும் அவர்கள் ஆய்வு செய்வர்.

வட்டார, உலகளாவிய முக்கிய நடப்பு விவகாரங்கள் குறித்தும் தங்களது கருத்துகளை அவர்கள் பகிர்ந்துகொள்வார்கள்.

சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு போன்ற பாரம்பரியத் துறைகளுக்கு அப்பால், பசுமைப் பொருளியல், எல்லை கடந்த மின்சார வணிகம், கரிமச் சேமிப்பு, செயற்கை நுண்ணறிவு (ஏஐ), மின்னிலக்க இணைப்பு போன்ற புதிய துறைகளிலும் தங்களது பங்காளித்துவத்தை விரிவுபடுத்தி வருகின்றன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இப்பயணத்தின் பின்னணியாக, கடந்த வாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

கடந்த 2025ஆம் ஆண்டில், இந்தோனீசியாவில் US$17.4 பில்லியன் முதலீடு செய்ததன் மூலம், அந்நாட்டின் ஆகப்பெரிய வெளிநாட்டு நேரடி முதலீட்டு நாடாகச் சிங்கப்பூர் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.

பிரதமர் லாரன்ஸ் வோங்குடன் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங், தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் குழுவும் செல்கிறது.

பிரதமர் வோங் வெளிநாடு சென்றிருக்கும்போது, தேசிய பாதுகாப்புக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் உள்துறை அமைச்சருமான கா. சண்முகம் தற்காலிகப் பிரதமராகப் பொறுப்பு வகிப்பார் என்று பிரதமரின் அலுவலகச் செய்தி தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்இந்தோனீசியாபிரதமர் வோங்பிரபோவோ சுபியாந்தோசந்திப்புஇருதரப்பு உறவு